Last Updated : 22 Mar, 2019 12:55 PM

 

Published : 22 Mar 2019 12:55 PM
Last Updated : 22 Mar 2019 12:55 PM

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்: புதுடெல்லி தொகுதியில் போட்டி?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முறைப்படி பாஜகவில் இன்று சேர்ந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாழ்த்துத் தெரிவித்தார்.

அதேசமயம் மற்றொரு வீரரான வீரேந்திர சேவாக் பாஜகவின் அழைப்பை புறக்கணித்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லி உள்ள 7 தொகுதிகளில் ஒரு தொகுதியில் குறிப்பாக புதுடெல்லியில் பாஜக சார்பில் கம்பீர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தேசப்பற்று விஷயங்களிலும், ராணுவ வீரர்கள் தொடர்பானவற்றிலும், சமூக பிரச்சினைகளிலும் அதிக அக்கறையுடன் கருத்துக்களை தெரிவித்து வந்தார். புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர், பாகிஸ்தானுடன் போரிட வேண்டும் என்றும், உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

மேலும், பல்வேறு தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் கம்பீர் ஏற்று உதவி வந்தார். இதனால், தீவிர அரசியலுக்கு விரைவில் கம்பீர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க கம்பீர் மறுத்துவிட்டார்.

அதேசமயம், புல்வாமா தாக்குதலுக்கு பின் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சில கூட்டங்களில் கம்பீர் பங்கேற்று பேசினார். இதனால், பாஜகவில் கம்பீர் விரைவில் சேர்வார் என்று செய்திகள் வெளியாகின. பாஜகவில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் பத்மஸ்ரீ விருதும் கம்பீருக்கு வழங்கப்பட்டது.

இந்த சூழலில் அனைவரின் சந்தேகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சும் வகையில், கவுதம் கம்பீர் நிதியமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் பாஜகவில் முறைப்படி இணைந்தார்.

கம்பீருக்கு பூங்கொத்து கொடுத்து அருண் ஜேட்லி வரவேற்றார்.

அதன்பின் நிருபர்களுக்கு கம்பீர் அளித்த பேட்டியில், " பிரதமர் மோடியின் செயல்பாடுகள், நிர்வாகம், திட்டங்களால் நான் வெகுவாக ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு பெருமைப்படுகிறேன். நாட்டை முன்னேற்ற சிறப்பாக பணியாற்றுவேன், நாட்டை வாழ்வதற்கு சிறப்பானதாக மாற்றுவேன்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x