Published : 12 Mar 2019 02:49 PM
Last Updated : 12 Mar 2019 02:49 PM
உயிரைப் பணயம் வைத்து போலீஸார் ரவுடியை விரட்டிப் பிடித்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்த விவரம்:
புலந்தர்சாஹர் அருகே குர்ஜா நகரின் பிரதான சாலை ஒன்றில் நேற்றிரவு போலீஸார் வழக்கமான பரிசோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு பேர் வந்த பைக் ஒன்றை நிறுத்தும்படி போலீஸார் சைகை காட்டினர்.
அவர்கள் பைக்கை நிறுத்தாமல் போலீஸாரைக் கடந்து வேகமாகச் சென்றனர். போலீஸாரும் தங்கள் பைக்குகளில் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அவர்களை நோக்கி போலீஸாரும் பின் தொடர்ந்ததால் அவர்களை நோக்கி பைக்கில் தப்பிச் சென்றவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அப்போது போலீஸாரும் அவர்களைப் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இருவரில் ஒருவரின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் அவர் கீழேவிழ, இன்னொருவர் மட்டும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றார். இரண்டு ரவுடிகளும் குல்வா மற்றும் திஷோதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் துணிகரமாகச் செயல்பட்ட வட்ட ஆய்வாளர் கோபால் சிங் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ''எங்கள் வழக்கமான சோதனையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதோடு விரட்டிப் பிடிக்கச் சென்ற எங்களை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அதன் பின்னர்தான் நாங்கள் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டி வந்தது. நாங்களும் துப்பாக்கியால் சுட்டோம். அந்த ரவுடிகளின் பேரில் ஏராளமான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த இருவரில் தற்போது குல்வா என்பவர் தப்பியோடினாலும் திஷோதா என்பவனது காலில் துப்பாக்கிச் சூடு பட்டு கீழே விழுந்தார். அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தோம். பின்னர் அவர்களது பைக்கையும் பறிமுதல் செய்தோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரவுடியின் தலைக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது''.
இவ்வாறு புலந்தர்சாஹர் காவல் நிலைய ஆய்வாளர் கோபால் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT