Published : 17 Mar 2019 10:59 AM
Last Updated : 17 Mar 2019 10:59 AM
தனது பரம விரோதியாக இருந்த முலாயம் சிங் யாதவுடன் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் பிரச்சார செய்ய உள்ளார் மாயாவதி. இதுபோல தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் 11 இடங்களில் பிரச்சாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஏப்ரல் 11 முதல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களான அகிலேஷ் சிங் யாதவ், மாயாவதி, அஜீத் சிங் ஆகியோர் ஏப்ரல் 7-ம் தேதி நவராத்ரியில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதுபோல, மொத்தம் 11 கூட்டங்களில் இவர்கள் ஒன்றாகப் பேச உள்ளனர். இவற்றில் ஏப்ரல் 19-ல் மெயின்புரியில் நடைபெறும் கூட்டத்தில் சமாஜ்வாதி நிறுவனரும் அந்த தொகுதி வேட்பாளருமான முலாயம் சிங் கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முலாயமுடன் மாயாவதி ஒரே மேடையில் தோன்றுவதுடன் அவருக்காக பிரச்சாரமும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் சவுத்ரி கூறும்போது, “இந்த பிரச்சாரக் கூட்டம் அனைத்து தலைவர்களின் அனுமதியுடன் முடிவு செய்யப்பட்டது. பகுஜன் சமாஜுடன் எங்கள் கட்சி கூட்டணி வைத்ததையடுத்து, பிரதமர் மோடி பழைய சம்பவத்தை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இதற்கு பெஹன்ஜி (மாயாவதி), இதுபோன்ற அவமானங்களைவிட நாட்டின் நலன் முக்கியம் என பதிலளித்திருந்தார்” என்றார்.
மத்தியிலும், உ.பி.யிலும் பாஜக ஆட்சியை அகற்றுவதற்காக இந்த இரண்டு கட்சிகளும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளன. கடைசியாக உ.பி.யில் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க இவர்கள் கூட்டணி வைத்தனர். அப்போது இரண்டு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, முலாயம் ஆட்சிக்கு அளித்த ஆதரவை பகுஜன் சமாஜ் நிறுவனரான கன்ஷிராம் வாபஸ் பெறுவதாக ஜூன் 2, 1995-ல் அறிவித்தார். அப்போது, லக்னோ விருந்தினர் மாளிகையில் சிக்கிய மாயாவதியை சமாஜ்வாதி கட்சியினர் தாக்கியதால் இரண்டு கட்சிகளும் எதிரும் புதிருமானது.
இப்போது, பிரதமர் பதவிக்கும் மாயாவதி குறி வைத்திருப்பதால் இதற்கு முலாயம் சிங் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இந்தக் கூட்டத்துக்கு அவர் ஒப்புக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த பிரச்சாரக் கூட்டங்கள் சஹரான்பூர், பதான்யூ, ஆக்ரா, ராம்பூர், பெரோஸாபாத், கன்னோஜ், பைஸாபாத், ஆசம்கர், கோரக்பூர், வாரணாசி ஆகிய முக்கிய தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT