Published : 31 Mar 2019 07:22 AM
Last Updated : 31 Mar 2019 07:22 AM
உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் பாஜக வாக்குகளை பிரிக்கும் வகையில் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. இதனால், அங்கு மாயாவதியுடன் அகிலேஷ் அமைத்த மெகா கூட்டணிக்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யின் மேற்கு பகுதியில் உள்ள எட்டு தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணியால் சேர்க்க மறுக்கப்பட்டதால் எட்டு தொகுதிகளிலும் தன் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. இவர்கள் அனைவரும் பாஜக வேட்பாளர்களின் வாக்குகளை குறி வைத்துள்ளனர். இதனால், காங்கிரஸ் வேட்பாளர்களால் பாஜகவிற்கு இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதில், மெகா கூட்டணியின் வேட்பாளர்கள் அதிக பலனை அடைய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அருகே உள்ள காஜியாபாத்தில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பிராமணரான டோலி சர்மா போட்டியிடுகிறார். இதனால், பாஜகவின் வாக்குகள் பிரிந்து மெகா கூட்டணியின் சுரேஷ் பன்ஸலுக்கு வாய்ப்புகள் உள்ளன.
மீரட்டில் உ.பி.யின் முன்னாள் முதல்வரான பனாரஸி தாஸின் மகன் ஹரேந்தர் அகர்வால் காங்கிரஸின் வேட்பாளர். இவர் எதிர்ப்பது பாஜக வேட்பாளர் ராஜேந்தர் அகர்வால். வியாபார சமூகத்தினரான இவர்கள், சுமார் 2.5 சதவீத வாக்குகளை பிரிக்கக்கூடும் என தெரிகிறது. இது, மீரட்டின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஹாஜி யாகூப் வெற்றி பெற உதவும் எனக் கூறப்படுகிறது.
கவுதம்புத் நகரில் மத்திய இணை அமைச்சரான மகேஷ் சர்மாவின் பாஜக வாக்குகளை பிரிப்பதற்காக, காங்கிரஸ் சார்பில் அர்விந்த் குமார் சிங் எனும் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். இதன் பலன், அங்கு பகுஜன் சமாஜின் சுரேந்தர் சிங் நாகருக்கு கிடைக்க உள்ளது.
இதேபோல், கைரானாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் அங்கு அதிக வாக்குகளைக் கொண்ட ஜாட் சமூக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், அந்த சமூக வாக்குகள் பிரிந்து சமாஜ்வாதிக்கு சாதகமாகும்.
முசாபர் நகரில் ஆர்எல்டியின் தலைவர் அஜித்சிங், பாக்பத்தில் அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரால் காங்கிரஸ் போட்டியிடவில்லை. எனினும், சஹரான்பூரில் மட்டும் காங்கிரஸின் வலிமையான வேட்பாளராக இம்ரான் மசூத் போட்டியிடுகிறார். முஸ்லிம் வாக்குகள் அதிகமுள்ள அங்கு பகுஜன் சமாஜும் முஸ்லிம் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இதனால், சஹரான்பூரில் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 24-ல் தொடங்கினார். இதே தொகுதியில் இருந்து மெகா கூட்டணியின் தலைவர்களான மாயாவதி, அகிலேஷ் மற்றும் அஜித்சிங் ஆகியோரும் தங்கள் பிரச்சாரத்தை ஏப்ரல் 7-ல் தொடங்க உள்ளனர். இதே தொகுதியில் ராகுல் காந்தியுடன், பிரியங்காவும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT