Published : 23 Mar 2019 02:03 PM
Last Updated : 23 Mar 2019 02:03 PM
மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களம்இறங்க முடிவுசெய்திருந்த மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவரின் மகன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான கோபால் பர்கவாவின் மகன் அபிஷேக் கோபால் பர்கவா. மத்தியப் பிரதேசத்தின் சாகர், டாமோ மற்றும் கஜுராஹோ ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜக வேட்பாளர் தேர்வுக்குழுவுக்கு இவரது பெயரும் அனுப்பப்பட்டிருந்தது.
பாஜக வேட்பாளர் தேர்வு தலைமைக்குழு ஆந்திரா, அசாம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் நிறுத்தப்பட உள்ள நேற்று 36 வேட்பாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச தொகுதிக்கான பட்டியலை பாஜக விரைவில் வெளியிட உள்ளது. இப்பட்டியலில் அபிஷேக் பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென இவர் வாரிசு அரசியல் செய்யவிரும்பவில்லை என தெரிவித்து மக்களவைத் தனது விருப்ப மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.
‘‘பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும் வாரிசு அரசியலுக்கு எதிராக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய காரணத்திற்காக கட்சியே போராடிக்கொண்டிருக்கும்போது நான் சாலையை அடைத்துக்கொண்டிருக்க விரும்பவில்லை.
வாரிசு அரசியலின் இன்னுமொரு குரலாக நான் ஒலிக்க விரும்பவில்லை. எனவே, தேசிய அரசியலில் தற்போது முன்னிறுத்தப்படும் வாரிசு மற்றும் குடும்ப
அரசியலுக்கு எதிராக நானும் எனது விருப்பத்தை விலக்கிக்கொள்கிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் நான் நிற்க விரும்பவில்லை. கட்சி வேறு யாரையாவது பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்’’ என தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் பொதுத்தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நான்கு, ஐந்து, ஆறு மற்றும் 7வது அட்டவணைகளில் அதாவது ஏப்ரல் 29, மே 6, மே 12 மற்றும் மே 19 ஆகிய தினங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 27 இடங்களை வென்றது. மீதமுள்ள 2 இடங்களை காங்கிரஸ் வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT