Last Updated : 10 Mar, 2019 09:59 AM

 

Published : 10 Mar 2019 09:59 AM
Last Updated : 10 Mar 2019 09:59 AM

பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல் இருக்கிறார்: நடிகை விஜய சாந்தி சர்ச்சை பேச்சு

பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல் இருக்கிறார், பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி  நடவடிக்கை போல் எந்த நேரத்தில் எந்த மாதிரியான வெடிகுண்டு வீசுவார் என்பது தெரியாமல் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சர்வாதிகாரி போல் மோடி செயல்படுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜய சாந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஷாம்சாபாத் நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் எம்.பி.யுமான விஜய சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விஜய சாந்தி பேசியதாவது:

பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற அதிர்ச்சி வெடிகுண்டுவை எந்த நேரத்தில்,எப்போது வீசுவார் என்பது தெரியாமல் மக்கள் அவரைப் பார்த்து அச்சப்படுகின்றனர்.

இந்த மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் போர்.

பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல் இருக்கிறார். சாமானிய மக்களிடத்தில் அன்பைப் பொழிவதற்குப் பதிலாக அவர்களை அச்சுறுத்துகிறார். ஒரு பிரதமர் இதுபோன்று செயல்படக்கூடாது.

பிரதமர் மோடி தனது ஆட்சியில் ஜனநாயகத்தைக் கொன்று, மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டார். மீண்டும் அடுத்தமுறையும் பிரதமராக ஆசைப்படுகிறார். மக்கள் மனதில் வைத்துத் தேர்தலில் மிகுந்த எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும்.

தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது மோடிக்கு வாக்களித்தது போன்றதாகும். மோடியும், டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவும் ஒன்றுதான் வேறு அல்ல. கடந்த தேர்தலில் வெற்றிபெற டிஆர்எஸ் கட்சிக்கு மோடி உதவியுள்ளார்.

இவ்வாறு விஜய சாந்தி பேசினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், " பிரதமர் மோடி இரு இந்தியாவை உருவாக்கி இருக்கிறார். ஒன்றை ஏழைகள் வாழ்வதற்கானது, மற்றொரு இந்தியா அவரின் நண்பர்கள் வாழ்வதற்கானதாகும். தொழிலதிபர்களுக்கு லட்சம் கோடிகளில் கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் ப யிர்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் கொள்கை இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பிரதமர் மோடி இயக்குகிறார். கேசிஆர் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவும், பிரதமர் மோடியையும், பாஜகவையும் மக்களவை, மாநிலங்கள் அவையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் ஆதரித்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து சந்திரசேகர் ராவ் இதுவரை பேசியிருப்பாரா, மோடி மக்களின் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை திருடிவிட்டார் என்று கூறியிருப்பாரா, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருப்பாரா, ஏன் கூறவில்லை. ஏனென்றால், சந்திரசேகர் ராவுக்கு, பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் விருப்பம் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x