Last Updated : 17 Mar, 2019 03:02 PM

 

Published : 17 Mar 2019 03:02 PM
Last Updated : 17 Mar 2019 03:02 PM

இளைய மருமகள் அபர்ணாவிற்கு வாய்ப்பளிக்கா விட்டால் பிரச்சாரம் செய்ய மாட்டேன் –அகிலேஷிடம் முலாயம் மிரட்டல்

மக்களவை தேர்தலில் தனது இளைய மருமகள் அபர்ணாவிற்கும் போட்டியிட வாய்ப்பளிக்க சமாஜ்வாதி நிறுவனர் வலியுறுத்தி வருகிறார். இவருக்கு வாய்ப்பளிக்கா விட்டால் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என அவர் அகிலேஷ்சிங் யாதவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

 

முலாயம்சிங்கின் மூத்த மகன் அகிலேஷ்சிங் யாதவின் சகோதரராக இருப்பவர் பிரத்தீக் சிங் யாதவ். இவரது மனைவியான அபர்ணா பிஷ்த் யாதவ்(29) கடந்த 2017-ல் உபி சட்டப்பேரவையில் லக்னோவின் ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிட்டார்.

 

இதில் வெற்றி பெறாத அபர்ணா ஏப்ரல் 11 முதல் துவங்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட முயல்கிறார். அம்மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள சம்பல் தொகுதியில் சமாஜ்வாதியிடன் வாய்ப்பு கோரியுள்ளார்.

 

இவர் கேட்ட தொகுதியில் அபர்ணாவிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனில், தான் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள முடியாது என மாமனரான முலாயம்சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இத்துடன் சமாஜ்வாதியின் கூட்டணிகட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்ய முடியாது எனவும் முலாயம் கூறி உள்ளார். இதனால், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

 

லக்னோவில் பெண்களுக்காக சமூகசேவை செய்து வரும் அபர்ணா, ஒரு கோசாலையும் நடத்தி வருகிறார். இதற்கு, உபி முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத்தும் நேரில் விஜயம் செய்திருந்தார்.

 

அபர்ணாவின் கோசாலைக்கு மிக அதிகமாக 86 சதவிகிதி நிதி உதவியை உபி அரசு அளிக்கிறது. இதனால், அபர்ணா பாஜகவில் சேருவார் எனவும் சர்ச்சைகள் கிளம்பி வந்தன.

 

இதுபோன்ற காரணங்களால் அபர்ணாவிற்கு போட்டியிடும் வாய்ப்பளிக்க அகிலேஷ் யோசனை செய்து வருகிறார். இவரைபோல், முலாயமின் மூத்த மருமகளும் அகிலேஷின் மனைவியுமாக இருப்பவர் டிம்பிள் யாதவ்.

 

மக்களவையில் இரண்டு முறை எம்பியான இவர் கன்னோஜ் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவருடன் சேர்த்து உபியில் முலாயம்சிங், மகன் அகிலேஷ் உள்ளிட்ட ஆறு பேர் இந்தமுறை போட்டியில் உள்ளனர்.

 

உபியின் 80 தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சமாஜ்வாதி போட்டியிடுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்க்கும் இவர்கள் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x