Published : 06 Mar 2019 08:49 AM
Last Updated : 06 Mar 2019 08:49 AM
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ‘நீரை தடுத்தால் பிரதமர் மோடியின் மூச்சை நிறுத்துவேன்’ என அந்நாட்டின் தீவிரவாதத் தலைவர் ஹபீஸ் சய்யீத் மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் வழியாகப் பாயும் ஐந்து நதிகள் தொடர்பாக பாகிஸ்தான், இந்தியா இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. இதில், இந்தியாவில் முழுமையாகப் பயன்படுத்தாத உபரி நீர் ஜீலம், சீனாப், ராபி, பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் ஆகிய 5 நதிகளின் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு பின் உ.பி. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கட்கரி, காஷ்மீரில் மூன்று அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுப்பதாகக் கூறி இருந்தார். இதில் பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் நதிகளின் நீரை யமுனை நதிக்கு திருப்பி விடுவதாகவும் தெரிவித்திருந்தார். இதை கேட்டு பாகிஸ்தானில் அதன் தீவிரவாத இயக்கங்கள் பதற்றமடைந்தன.
மேலும் கட்கரிக்கு பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தானின் பொதுக்கூட்ட மேடைகளில் தீவிரவாதத் தலைவர்கள் பேசி வருகின்றனர். பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ‘ஜமாத்-உத்-தாவா’வின் தலைவரான ஹபீஸ் சய்யீதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதன் வீடியோ பாகிஸ்தானில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சய்யீத் தனது பேச்சில், ‘நீ பேசினால் அல்லாவின் அருளால் நானும் பேசுவேன். பாகிஸ்தானுக்கு வரும் நீரை நிறுத்துவாயா? காஷ்மீரில் அணைகட்டி நீரைத் தேக்குவாயா? அதை எங்களுக்கு இல்லாமல் செய்வாயா? எல்லை மீறி நீ பேசிவிட்டு அதற்கு நாம் பதிலளிக்காமல் மவுனம் காக்க வேண்டும் என விரும்புகிறாயா? நீ நீர்வரத்தை தடுத்தால் நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.
சய்யீதின் இந்த மிரட்டலினால் அவருக்கு பாகிஸ்தானியர்கள் இடையே செல்வாக்கு கூடி வருகிறது. இவர், பாகிஸ்தானின் பழமையான தீவிரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பா’வின் இணை நிறுவனர் ஆவார்.
ஹபீஸ் சய்யீதின் தலைமையில்தான் கடந்த 2008-ல் மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 166 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் பிறகு ஹபீஸ் சய்யீதின் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இடையே குரல்கள் எழுந்தன. இதையடுத்து ஹபீஸ் நடத்தும் ‘ஜமாத்-உத்-தாவா மற்றும் ஃபலா-எ-இன்சானியத் பவுண்டேஷன் ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு பெயரளவு மட்டுமே என்பதும், ஹபீஸுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு தொடருவதும் தற்போது தெரியவந்துள்ளது. தன் அமைப்புகளுக்காக ஹபீஸ் தொடர்ந்து நிதி வசூல் செய்வதையும், அவற்றை பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் சர்வதேச அமைப்பான ’பைனான்சியல் ஆக் ஷன் டாஸ்க் போர்ஸ்’ கண்டுபிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT