Published : 30 Mar 2019 03:47 PM
Last Updated : 30 Mar 2019 03:47 PM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி-பகுஜன் சமாம்-ராஷ்ட்ரிய லோக்தள் கூட்டணி மற்றும் காங்கிரஸில் பிரியங்கா காந்தியின் வரவு ஆகியவற்றினால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தன் அதிகாரப்பிடியை வரும் தேர்தலில் தக்கவைப்பது கடினம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் அதன் பிரியங்கா காந்தி வரவு, அகிலேஷ் யாதவ்-மாயாவதி கூட்டணி மற்றும் இதில் உள்ள ராஷ்ட்ரீய லோக்தள் ஆகியவை பாஜகவை எதிர்க்க உ.பி. மும்முனைப் போட்டிக்குத் தயாராகி வருகிறது. இவர்கள் வலுவான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் பாஜக உ.பி.யின் மீதான தன் பிடியைத் தக்க வைப்பது கடினம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக்தள் கூட்டணி பாஜகவுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் என்றால் காங்கிரஸ் கட்சியின் கணிக்க முடியாத தன்மை எப்பக்கமும் வாக்குகளை பிரித்துப் போடும் நிலை உள்ளதால் பாஜகவுக்கு நன்மையும் ஏற்படலாம் தீமையும் ஏற்படலாம். இந்த மும்முனைப் போட்டி 80 லோக்சபா தொகுதிகளையும் தீர்மானிக்காது என்றாலும் இதன் தாக்கங்களை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
2014-ல் எதிர்க்கட்சிகள் உடைந்திருந்ததால் 73 தொகுதிகளை பாஜக தனது சகாவான அப்னாதல் கூட்டணியுடன் கைப்பற்றியது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட 2017 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணி இரு கட்சிகளுக்கும் பெரும் அழிவையே ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் தனியாக நின்று தலித்-முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்ததில் தோல்வி தழுவியது.
2014 தேர்தல் வெற்றிக்குக் காரணம் மோடி அலை என்றால், 2017 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி சிறு சிறு வெற்றிகளின் தொகுப்பாகும். பாஜக இதில் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி என்ற புதிய சேர்க்கையை தன்னுடன் சேர்த்துக் கொண்டது. சுவாமி பிரசாத் மவுரியா போன்ற பகுஜன் தலைவர் உட்பட பல ஓபிசி முக்கியத் தலைவர்களை தன் பக்கம் திருப்பி யாதவர்களுக்கு எதிராக ஓபிசியின் சில பிரிவினர்களை பிளவு படுத்தி பாஜக சாதி அரசியலில் வெற்றியைப் பெற்றது.
ஆனால் வரும் தேர்தலில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. இப்போது யாதவர்கள், ஜாட்கள் வாக்குகள் இந்தக் கூட்டணிப்பக்கம் திரும்ப வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஜாட்கள், யாதவர்கள் ஆகிய வாக்குவங்கியுடன் முஸ்லிம் வாக்கு வங்கியான 19.5%-ஐயும் ஓரளவுக்குப் பிரியாமல் தங்கல் பக்கம் இந்தக் கூட்டணி திருப்பும் என்றே பார்க்கப்படுகிறது.
வாக்களிக்கும் முறைகளை இது போன்று எளிய கணக்கீடுகள் மூலம் கண்டறிய முடியாது எனினும், சமாஜ்வாதி-பகுஜன் - ஆர்.எல்.டி ஒட்டுமொத்த வாக்கு வங்கி 2014 மற்றும் 2017-ல் முறையே 42.98% மற்றும் 45.83% மாறாக 2014-ல் பாஜக கூட்டணியின் வாக்கு வங்கி 41.64% 2017-ல் 41.35%.
ஆகவே பாஜக கையில் இருப்பது மோடி அலை எனும் ஆயுதம், உயர்ஜாதி இந்துக்களின் வாக்குகள், யாதவர்கள் அல்லாத ஓபிசி பிரிவினர், ஜாட்கள் அல்லாத தலித் பிரிவினர் ஆகியோரின் வாக்குவங்கிகளுடன் பலவீனமான புல்வாமா தாக்குதல் சொல்லாடலும்தான் பாஜகவுக்கு உள்ளது. மேலும் மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் பிரச்சாரம் கடுமையாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, உதாரணமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிறன்று காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூதை ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் உறவினர் என்று தப்பும் தவறுமாக உளறிக்கொட்டியதைக் குறிப்பிடலாம்.
பாஜகவுக்கு எதிரான சில போக்குகள்:
ஆளும் பாஜகவுக்கு எதிராக திரியும் கால்நடைகள் குறித்த பிரச்சினைகள், கரும்புத் தொழிலாளிகளுக்கான நிலுவைத் தொகையினை பெரிதாக அறிவித்து பூச்சாண்டி காட்டி விட்டு இன்னும் கொடுக்காமல் இருப்பது, விவசாயிகளின் கடும் ஏமாற்றங்கள், வேலையின்மை, நடப்பு எம்.பி.மீதான கடும் அதிருப்தி அலை, 20114-ல் பாஜகவுக்கு வாக்களித்த ஓபிசியின் சில பிரிவினர் மற்றும் தலித்களின் கடும் அதிருப்தி காங்கிரஸின் எழுச்சியினால் உயர்சாதி வாக்குகள் பிளவடைவது என்று பாஜகவுக்கு ஏகப்பட்ட தலைவலிகள் உள்ளன, இதனை புல்வாமா, பாலகோட், சாட்டிலைட் அழிப்பு வார்த்தை ஜோடனைகளால் மாற்றி விடமுடியுமா என்பது ஐயமே.
மாறாக கூட்டணிக் கட்சிகளின் பிரச்சினை என்னவெனில் ஆர்.எல்.டி. கட்சியின் ஒரு கோடி வாக்களர்களில் பெரும்பான்மை ஜாட்களை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணிப் பக்கம் திருப்புவதாகும் இந்த வாக்குகளும் பிளவுபடும் என்றே தெரிகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் இந்த சாதி வாக்குகள் கணக்கீடுகளைத் தாண்டி விவசாயிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மையை பெரிய அளவில் பேசி வாக்குகளாக மாற்றுவது. காங்கிரஸின் எழுச்சியும் முஸ்லிம் வாக்குகளை மேலும் சிக்கல்படுத்தியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் முக்கோணப் போட்டிதான் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT