Published : 23 Mar 2019 10:30 PM
Last Updated : 23 Mar 2019 10:30 PM
அயோத்தியின் ராமர் கோயிலுக்கு அடுத்த வாரம் செல்கிறார் பிரியங்கா வத்ரா. குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போது ராகுல் காந்தி செய்ததை போல் அவர் உபியின் கோயில்களுக்கு விஜயம் செய்கிறார்.
கடந்த வாரம் உபியில் பிரயாக்கில் உள்ள அனுமன் கோயிலில் இருந்து தேர்தல் பிரச்சாரம் துவக்கினார் பிரியங்கா. விந்தியாச்சலின் சீதாமடி, வாரணாசியின் காசி விஸ்வநாத் ஆகிய கோயில்களுக்கும் அவர் சென்றார்.
இந்த போக்கை வரும் திங்கள் முதல் மீண்டும் துவக்கும் பிரச்சாரத்திலும் பிரியங்கா தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று, தன் தாய் சோனியா காந்தியின் ரேபரேலியில் பிரச்சாரம் செய்கிறார் பிரியங்கா.
தொடர்ந்து, அருகிலுள்ள அமேதியில் அண்ணன் ராகுலுக்கும் என இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்து விட்டு பைஸாபாத் சென்று இரவு தங்குகிறார் பிரியங்கா. மறுநாள் புதன் காலை அயோத்தியில் ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார் பிரியங்கா.
அயோத்தி-பைஸாபாத் தொகுதியில் போட்டியிடும் உபி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் கத்ரிக்காக பிரியங்கா பிரச்சாரம் செய்கிறார். இங்கு ராமர் கோயிலுக்கு பிரியங்கா செல்வது முதன் முறை எனக் கருதப்படுகிறது.
2014 மக்களவை தேர்தலில் வென்று பாஜக தலைமையிலான ஆட்சிக்கு பின் தேசிய அரசியலில் இந்துத்துவா கொள்கைக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதற்கு, 2017 இறுதியில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இதே வியூகத்தில் அவர் அடுத்து நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மபியின் உஜ்ஜைன் காலபைரவர், ராஜஸ்தானின் புஷ்கர் பிரம்மா உள்ளிட்ட முக்கியக் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். தன்
சகோதரன் வழியை மக்களவை தேர்தலுக்கு உபியில் பிரியங்கா பின்பற்றுகிறார்.
பிரியங்காவின் கோயில் தரிசனங்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்வது இந்துத்துவா வாக்குகளை பெற்றுத்தரும் எனக் காங்கிரஸ் கருதுகிறது. இந்துத்துவாவிற்கு பெயர் போன உபியில் நலிந்திருக்கும் அக்கட்சிக்கு இந்த கோயில்கள், வாக்குகளை பெற்றுத்தருமா என்பது மே 23-ல் வெளியாகும் முடிவுகளில் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT