Published : 03 Mar 2019 05:20 PM
Last Updated : 03 Mar 2019 05:20 PM
உ.பி.யின் வாரணாசியில் துப்புரவுப்பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்கள் நேற்று பலியாகி உள்ளனர். பகுதி நேர ஊழியர்களாக அவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் இருந்தது அவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாகி உள்ளது.
வாரணாசி மாநகராட்சியின் துப்புரவுப் பணி தனியார் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தற்காலிகப் பணியாளர்களாக சந்திரகுமார் (34) மற்றும் ராஜேஷ் பாஸ்வான்(26) ஆகியோர் இருந்தனர். இருவரும் நேற்று அந்நகரின் பாதாள சாக்கடையில் இறங்கி பணியாற்றினர். அப்போது அவர்களுக்கு விஷவாயுவில் இருந்தும் தப்பும் பாதுகாப்பு சாதனம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் இறங்கிய பாதாள சாக்கடையில் இருந்த ஒரு குழாய் திடீர் என உடைந்தது. அதில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதால் சந்திரகுமார், ராஜேஷ் பாஸ்வான் இருவரும் மூச்சு திணறி பலியானார்கள்.
இது குறித்து சந்திரகுமாரின் மனைவி பூஜா தேவி கூறும்போது, ''தற்காலிகப் பணியாளரான எனது கணவரின் பணியை நிரந்தரமாக்குவதாக அந்நிறுவனம் உறுதி அளித்திருந்தது. இதனால், அவர் ஆபத்தான பணிகளையும் பாதுகாப்பு சாதனங்கள் அளிக்கப்படாத நிலையிலும் பணிசெய்தது உயிரையே பலிவாங்கி உள்ளது'' எனத் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்றவுடன் அங்கு தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் வந்தனர். அவர்கள் பாதாள சாக்கடையில் இருந்து பலியானவர்கள் உடலை மீட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் பாதாள சாக்கடைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதற்காக, மாநகராட்சி சார்பில் பணியாளர்களை அதிகம் அமர்த்துவதில்லை. மாறாக, மாநகராட்சி இதற்கானப் பணியை தனியார் நிறுவனங்களிடம் அளிக்கிறது. அவர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக வேண்டி, பாதுகாப்பு சாதனங்களை தன் துப்புரவுப் பணியாளர்களுக்கு அளிப்பதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வாரணாசி மாவட்ட பொறுப்பு ஆட்சியரான கவுரங் ரத்தி கூறும்போது, ''பலியான சம்பவம் குறித்து விசாரிக்க மூவர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அளிக்க தனியார் நிறுவனம் முடிவு செய்துள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற நிறுவனங்கள் சாதாரணப் பணியாளர்களுக்கு அன்றாடக் கூலியான ரூ.300 அளிக்கிறது. பாதாள சாக்கடை சுத்தமாக்கல் போன்ற ஆபத்தான பணிக்கு கூடுதலாக ரூ.200 முதல் 300 தருகின்றன.
கடந்த 2013-ல் துப்புரவுப் பணியாளர்களுக்கான சட்டப்படி பாதுகாப்பு சாதனங்கள் அளிக்காமல் வேலை வாங்குவோர் மீது வழக்குப் பதிவு செய்து, ஐந்து வருட சிறை தண்டனையும் அளிக்கிறது. எனினும், இந்த சட்டப்படி இதுவரை உ.பி.யில் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
உ.பி.யின் அலகாபாத் அர்த் கும்பமேளாவில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக அதன் துப்புரவுப் பணியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்டனர். இதற்காக அவர்களில் சிலரது பாதங்களையும் அவர் கழுவி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT