Published : 28 Mar 2019 03:51 PM
Last Updated : 28 Mar 2019 03:51 PM

முகநூலில் குறை: விவசாயியிடம் தொலைபேசியில் பேசி 30 நிமிடங்களில் குறைதீர்த்த தெலங்கானா முதல்வர்

பேஸ்புக்கில் தனது குறைகளைக் கூறிய விவசாயிக்கு  தொலைபேசியில் அழைப்புச் செய்து 30 நிமிடங்களில் குறையை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தீர்த்து வைத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டம், நந்துலுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத். இவரின் 7 ஏக்கர் நிலம் இருந்தது. அதை வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் நிலச்சீரமைப்பில் சரத்தின் நிலப்பத்திரங்களை சிலர் போலியாக தயாரித்து கிராம நிர்வாக அதிகாரி மூலம் நிலத்தை அபகரித்துவிட்டனர்.

தன்னிடம் நிலத்துக்கான உண்மையான நில பத்திரம், ஆவணங்கள் இருந்தும், நில அபகரிப்பை தடுக்க முடியவில்லையே என வருந்தினார். இதுதொடர்பாக கடந்த 11 மாதங்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனைத்துக்கும் சென்று தனது குறையை சரத் தெரிவித்தார். ஆனால், அவரின் குறை தீர்ந்தபாடில்லை.

இதையடுத்து, கடந்த வாரம் பேஸ்புக் லைவ் மூலம் தனது குறையை கூறி நிவாரணம் தேட சரத் முடிவு செய்தார். பேஸ்புக் லைவ் மூலம் தனது குறைகளைக் கூறி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இந்த வீடியோ எப்படியாவது, முதல்வர் சந்திரசேகர் ராவ் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் என்று உருக்கமாகக் கூறி முடித்துவிட்டார்.

கடந்த ஒருவாரமாக பல்வேறு நபர்களால் இந்த வீடியோ பகிரப்பட்டு, கடைசியாக முதல்வர் சந்திரசேகர் ராவ் பார்வைக்கு இந்த வீடியோ சென்றது. இந்த வீடியோவைப் பார்த்து முடித்த முதல்வர் சந்திரசேகர் ராவ், தொலைபேசியில், நேரடியாக சரத்தை தொடர்பு கொண்டார்.

]kcrjpgதெலங்கானா முதல்வர் கே.சி. சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்100

முதல்வர் சந்திரசேகர் ராவ் தன்னை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இன்பஅதிர்ச்சி சரத்துக்கு ஏற்பட்டது. அப்போதும் அவரிடம் குறைகளை சரத் கூறியுள்ளார். சரத்திடம் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், அடுத்த 30 நிமிடங்களில் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும், உங்களுடைய நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

முதல்வர் சந்திரசேகர் ராவ் உறுதியளித்தபடி, அடுத்த 30 நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர் பாரதி ஹோலிகேரி, போலீஸ் எஸ்.பி. வருவாய் அதிகாரிகள் அனைவரும் சரத் வீட்டுக்குவந்து தேவையான ஆவணங்களை அளித்து நிலத்தை மீட்டுக் கொடுத்தனர்.

போலியாக பத்திரங்களை தயாரித்து சரத்திடம் இருந்து நிலத்தை அபகரித்த கிராம வருவாய் அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கும் ஆட்சியர் பாரதி  உத்தரவிட்டார். மேலும் ரிதுபந்து திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிதிஉதவி சரத்துக்கு கிடைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x