Published : 04 Mar 2019 10:54 AM
Last Updated : 04 Mar 2019 10:54 AM
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் லக்சயா ஜிதோ எனும் நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அதில் அமித் ஷா பேசியதாவது:
உரி தாக்குதலுக்கு பின் ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின், உச்ச கட்ட எச்சரிக்கையால், எந்தவிதமான துல்லியத் தாக்குதலையும் நடத்த முடியவில்லை என பலரும் பேசினார்கள். ஆனால், நரேந்திர மோடி அரசு, புல்வாமா தாக்குதல் நடந்த 13-வது நாளில், விமானப் படை மூலம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நம்முடைய ராணுவ வீரர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் மீண்டும் பேசத் தொடங்கினர். இதற்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபடும் நமது வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
ஆனால், இன்று நிலைமை வேறு. மத்தியில் மோடி தலைமையிலான அரசு இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் எப்-16ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தி அவர்களின் பகுதிக்குள் நமது வீரர் விழுந்த போதிலும், மிகக் குறைந்த நேரத்தில் 48 மணிநேரத்தில் நமது வீரர் மீட்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடியின் தலைமைதான்.
உலகில் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அடுத்தாற்போல், தீவிரவாத செயலுக்கு பழிதீர்க்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரங்கள் கேட்கிறார்கள். மம்தா ஆதாரம் கேட்கிறார், ராகுல் காந்தி அரசியல் செய்கிறார், அகிலேஷ் யாதவ் விசாரிக்க வேண்டும் என்கிறார். இவர்களின் பேச்சைக் கேட்டு நான் வெட்கப்படுகிறேன்.
இவர்களின் பேச்சு பாகிஸ்தானைத்தான் மகிழ்ச்சிப்படுத்தும். மோடியையும், ராணுவத்தையும் ஆதரிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் இவர்கள் அமைதியாக இருக்கலாம். இந்திய விமானப்படை தாக்குதல் குறித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியும் இவர்கள் நம்பவில்லை. இவர்களை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்கள், பாகிஸ்தானுக்கு உதவி, பாகிஸ்தான் நோக்கத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.
இவ்வாறு அமித் ஷா குற்றம்சாட்டினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT