Last Updated : 29 Mar, 2019 01:22 PM

 

Published : 29 Mar 2019 01:22 PM
Last Updated : 29 Mar 2019 01:22 PM

உ.பி.யில் ரவுடிக் கும்பலின் தலைவன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற வழியில் தப்பி ஓட்டம்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிபயங்கர ரவுடிக் கும்பலின் தலைவன் இன்று நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்த அதிபயங்கர ரவுடிக் கும்பல்களின் தலைவன் பதான் சிங் பாட்டோ போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தார். இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். எனினும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது இன்று காலை அவர் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் நாராயண் சிங் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:

''பாதேகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாட்டோ, இன்று வியாழக்கிழமை நீதிமன்ற விசாரணைக்காக காஜியாபாத்திற்கு அழைத்து வரப்பட்டார். இருப்பினும், மர்மமான சூழ்நிலையில், அவர் தங்கவைக்கப்பட்டிருந்த மீரட் ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றார். உடன் இருந்த போலீஸார் சிலரும் அவருடன் சென்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மீரத் மூத்த காவல் கண்காணிப்பாளர் நிதின் திவாரி ரவுடிக் கும்பல் தலைவன் தங்கியிருந்து ஹோட்டலுக்கு விரைந்தார். அங்கு காவல் படைக் குழுவின் மீதமிருந்த போலீஸாரைக் கைது செய்தார். குற்றவாளி பாட்டோ சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு வரும்வழியில் தப்ப விட்டதற்கு அவர்களே பொறுப்பு என்று அவர் தெரிவித்தார்.

இத்தனைக்கும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்படுவதற்காக குற்றவாளிக்கு கடும் காவல் போடப்பட்டிருந்தது. இவ்வளவு காவலையும் மீறி அவர் தப்பிச் சென்றுள்ளார். எனவே குற்றவாளி தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பாக ஆறு போலீஸாரும், மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாட்டோ தப்பிச் சென்றதில் போலீஸாரும் உடந்தையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் நாராயண் சிங் தெரிவித்தார்.

ரவுடிக் கும்பலின் தலைவன் கடும் போலீஸ் காவலையும் மீறி தப்பிச் சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x