Published : 27 Mar 2019 12:25 PM
Last Updated : 27 Mar 2019 12:25 PM
இணைய மோசடி செய்து வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3.68 லட்சம் கொள்ளையடித்த பலே கில்லாடிகள் இருவரை ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
செல்போனிலிருக்கும் சிம்களை மாற்றி வங்கிவிவரங்களை உருவாக்குவதன்மூலம் இக்கொள்ளை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராச்கொண்டா காவல்நிலையத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்த விவரம்:
சாரங்கா சந்தியா என்பவர் தனது கணவரின் வங்கிக் கணக்கிலிருந்து 3.68 லட்சம் ரூபாய் திருடுபோயுள்ளதாக புகார் அளித்தார். அவர் அளித்த விவரங்கள் வாயிலாக மர்ம நபர்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது உறுதியானது.
செல்போன் சிம்மை மாற்றி, ஐஎம்பிஎஸ் இம்மிடியட் பேமெண்ட் சர்வீஸ் எனப்படும் உடனடி பணம் செலுத்துதல்/எடுத்தல் சேவை செயலி வழியாக அவரது கணக்கிலிருந்து கிட்டத்தட்ட ரூ.3,68,056 தொகை திருடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின்கீழ் 417, 19, 420 விதிகளின்கீழ் பதிவு செய்ப்பட்டு விசாரணை மற்றும் ரகசியமாக கண்டுபிடிக்கும் பணியும் நடைபெற்றது.
வங்கி விவரங்கள் மூலமாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் விசாரணைகள் நடைபெற்றன. பெறப்பட்ட தொழில்நுட்ப சான்றுகள் அடிப்படையில் ஹைதராபாத்துக்கு அருகிலுள்ள பாலாங்கர் நகரைச் சேர்ந்த முதோஜிசத்யநாராயணா மற்றும் பெருமுல்லா ஸ்ரீ கிருஷ்ண பிரசாத் ஆகிய இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த கொள்ளையடித்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் எப்படி அவர்களது வங்கிக்கணக்கு பெறப்பட்டது உள்ளிட்ட நூதன மோசடி தொடர்பான பல்வேறு விசாரணைகள் அவர்களிடம் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு ராச்கொண்டா காவல்நிலைய சைபர் கிரைம் போலீஸார் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT