Last Updated : 27 Mar, 2019 02:31 PM

 

Published : 27 Mar 2019 02:31 PM
Last Updated : 27 Mar 2019 02:31 PM

ஏ-சேட் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது பயன்பாட்டில் இல்லாத இந்திய செயற்கைக்கோள்: அரசு தகவல்

ஏ-சேட் ஏவுகணை மூலம் விண்வெளியில் வீழ்த்தப்பட்ட செயற்கைக்கோள் பயன்பாட்டில் இல்லாத இந்திய செயற்கைக்கோள் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்க முயற்சிக்கும் எதிரி செயற்கைக்கோளை தடுத்து ஏவுகணை மூலம் வீழ்த்தும் ஏ-சேட் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

இதனை தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த பாதுகாப்பு அம்சத்தை பெற்றுள்ள நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிலையில், விண்வெளியில் அழிக்கப்பட்டது பயன்பாட்டில் இல்லாத இந்திய செயற்கைக்கோள் எனத் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் டிஆர்டிஓ தரப்பிலிருந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கிடைத்த தகவலின்படி, ஏ-சேட் ஏவுகணையானது இன்று (புதன்கிழமை) காலை 11.16 மணியளவில் ஏவப்பட்டது. இந்த ஏவுகணையானது ஏற்கெனவே செயலிழந்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் குறைந்த தூரத்தில் அதாவது பூமியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த செயற்கைக்கோளை வீழ்த்தியுள்ளது. மூன்று நிமிடங்களில் இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் ஏவுகணை தளத்திலிருந்து இந்த சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

மிஷன் சக்தி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆபரேஷனை டிஆர்டிஓ நிர்வாக இயக்குநர் சதீஷ் ரெட்டி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தாக்குதலின்போது பாலாசோர் தளத்தில் சதீஷ் ரெட்டி இருந்துள்ளார்.

பிரதமர் மோடி உரையின்போதும் ஏவுகணை தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது ஆனால் அது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல சோதனை முயற்சி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x