Published : 04 Mar 2019 01:02 PM
Last Updated : 04 Mar 2019 01:02 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜனதா தர்பார் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தாராளமாக எடுத்துச் சொல்ல முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து அவற்றிற்குத் தீர்வு காண ஜனதா தர்பாரைத் தொடங்கியுள்ளார்.
அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளையும் இதில் அவருடன் பேசுகின்றனர். அவற்றின் தீவிரத் தன்மையைப்பொறுத்து உடனுக்குடன் தீர்வு ஏற்பட அதிகாரிகளை அழைத்து அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மகத் கோயிலில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினையொன்றை அவர் முன்னிலையில் கொண்டுவந்தனர். அதனைக் கவனமாக கேட்ட முதல்வர் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்த ராமா ஷங்கர் மிஸ்ரா என்பவர் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:
''என்னுடைய மகளை பாஸ்தி மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவன் திருமணம் செய்துகொண்டான். பின்னர் 2017ல் ஜனவரி 30 அன்று அவளைக் கொன்றுவிட்டான். பின்னர் அவனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இப்போது அவன் என்னுடைய மற்ற அனைத்து மகள்களையும் கொன்றுவிடப் போவதாக மிரட்டி வருகிறான். இப்பிரச்சினையைக் கவனமாக கேட்டறிந்த முதல்வர் நிச்சயம் கடும் நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்''.
இவ்வாறு ராமா ஷங்கர் தெரிவித்தார்.
சந்தன் திரிபாதி என்பவரும் முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்தார். அவர் கூறுகையில், ''எங்கள் பகுதியில் சாலை வசதி மோசமாக இருப்பதை முதல்வரிடம் கூறினேன். மேலும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் இருப்பதையும் கூறினேன். என்னுடைய பகுதியை விசாரித்தறிந்த முதல்வர் அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்'' என்றார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஜனதா தர்பாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT