Last Updated : 02 Feb, 2019 01:12 PM

 

Published : 02 Feb 2019 01:12 PM
Last Updated : 02 Feb 2019 01:12 PM

ராமர் கோயில் கட்ட மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்: மோகன் பாகவத்

ராமர் கோயில் கட்ட மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜின் அர்த் கும்பமேளாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

அர்த் கும்பமேளாவிற்காக ஜனவரி 14 முதல் சாதுக்களும், மடாதிபதிகளும் பிரயாக்ராஜில் முகாமிட்டுள்ளனர். இதற்காக, நேற்று ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பிரிவான விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி) ராமர் கோயிலுக்கான 'தரம் சன்சத்' (சாதுக்களின் தர்மசபை கூட்டம்) தொடங்கியது. இரண்டு நாட்களுக்கான இந்தக் கூட்டத்தில் விஎச்பி ஆதரவு சாதுக்கள் கலந்து கொண்டனர். இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார்.

அக்கூட்டத்தில் பாகவத் பேசும்போது, ''ராமர் கோயில் கட்டப்படும். தயவு செய்து ஆறுமாத காலம் வரை பொறுக்க வேண்டும். மத்தியில் மோடியின் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஏனெனில், அவரது கட்சி மட்டுமே ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி பேசுகிறது'' எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் முன் கூடிய விஎச்பிக்கு எதிரான சாதுக்கள் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதில், ''கோயில் கட்டும் தேதியை கூறுங்கள்'' என வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.  இதனால், அங்கு சில மணி நேரம் இருதரப்பின் சாதுக்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இவர்களை விஎச்பி ஆதரவு சாதுவான அகிலேஷ்வராணந்த் தலையிட்டு சமாதானப்படுத்தினார்.

அப்போது எதிர்ப்புக் கூட்டத்தினர் இடையே அகிலேஷ்வராணந்த் பேசும்போது, ''எங்கள் தர்மசபைக் கூட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது என்பதற்காக நாம் ராமர் கோயில் கட்டும் தேதியைக் குறிப்பிடப்போவதில்லை'' எனத் தெரிவித்தார்.

இதுபோல், ராமர் கோயில் மீதான தர்மசபைக் கூட்டங்கள் இதுவரை இரண்டு நடைபெற்றுள்ளன. நேற்று அர்த் கும்பமேளாவில் தொடங்கியது அதன் மூன்றாவது கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பிப்ரவரி 2-ல் வரும் மக் கிருஷ்ணா திரியோதசி அன்று பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் சாதுக்கள் கூடி மஹா யாகம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

மற்றொரு தீர்மானத்தில் ஏப்ரல் 6-ல் அனைத்து ராம பக்தர்களும் சைத்ர சுக்லா பிரதிபாடமாக, ‘ஸ்ரீராம், ஜெய் ராம், ஹெய் ஜெய் ராம்’ என ராமர் கோயில்கள் முன்கூடி 13 கோடி முறை ஸ்லோகம் கூற வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

இதனிடையே, விஎச்பியின் கூட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான சாதுக்கள் துவாரகா பீடம் மற்றும் பத்ரிநாத் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியரான சுவாமி ஸ்வரூபாணந்த் சரஸ்வதி தலைமையில் ‘பரம தர்மசபை’யின் இரண்டாவது கூட்டத்தை கும்பமேளாவில் நடத்தினர்.

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற அக்கூட்டத்தில், வரும் பிப்ரவரி 21-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படும் எனவும் முடிவு எடுத்து அறிவித்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x