Published : 06 Feb 2019 11:17 AM
Last Updated : 06 Feb 2019 11:17 AM
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான குழுவானது, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைக்கு அனுமதி வழங்கியுள்ளது. கையகப்படுத்தப்படும் பறவைகள், வனவிலங்கு பகுதிகளுக்கான இடங்களுக்குப் பதிலாக ஐந்து மடங்கில் புதிய வனப்பகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோரால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதிவேக புல்லட் ரயில் திட்டம் 2022 ஆம் ஆண்டில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புல்லட் ரயில் செல்லும் பாதையில்தான் ஃபிளமிங்கோ சரணாலயம் மற்றும், மும்பையில் உள்ள சிறுத்தைப்புலிகள் நிறைந்த சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் ஆகியவை உள்ளன.
இந்தத் திட்டத்திற்காக, தானே பகுதியின் கடல் முகத்துவார ஃப்ளமிங்கோ வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 3.2756 ஹெக்டேர் வன நிலப்பகுதி ஒதுக்கப்படுகிறது. இது தவிர, 97.5189 ஹெக்டேர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லைக்கு அருகிலேயே உள்ளது.
புல்லட் ரயிலுக்காக வனவிலங்கு வாழ்விடங்களை ஒதுக்குவது குறித்து பெயர்தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:
''புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்படுவதற்கான கூட்டத்தில் அசல் செயல்திட்ட நிரலில் காடு அகற்றப்படுவது குறித்து எதுவும் ஆரம்பத்தில் இல்லை. பின்னரே இது சேர்க்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் இதுமாதிரி ஒரு கோப்பு தலைவர் (வர்தான்) தலையிடுவதன் மூலம் சேர்ப்பதற்கு விதிமுறைகளில் இடம் இருக்கிறது.
அவ்வாறுதான் வனவிலங்கு அனுமதி பெறுவதற்கான ஒரு கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்காகவே ஏற்பாடு செய்ப்பட்ட திட்டக் கூட்டம் ஜனவரி 10 அன்று நடைபெற்று அதில் ரயில்வே திட்டப் பாதைக்கான வனவிலங்கு அனுமதியும் வழங்கப்பட்டது''.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
மும்பை, தானேவில் உள்ள டிசிஎஃப் ஆகஸ்ட் 2015 லிருந்து மும்பை நிர்வாகத்துக்கு வந்துவிட்டது. இங்குதான் இயற்கையும் பறவைகளும் கரம் கோக்கும் பறவைகளின் சொர்க்கம் அமைந்துள்ளது.
பரந்து விரிந்துள்ள பறவைகள் சொர்க்கத்தின் பரப்பளவு 1,690 ஹெக்டர்கள்! இங்குதான் ஏராளமான ஃபிளமிங்கோ பறவைகள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதில் 896 ஹெக்டேர்ஸ் மாங்குரோவ் காடுகள் நிறைந்த பகுதி அதையொட்டிய பகுதிகளில் கடல் முகத்துவாரத்தின் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள 794 ஹெக்டேர்ஸ் நீர்நிலைப் பகுதி. குறிப்பாக இப்பகுதி மும்பை மற்றும் நவி மும்பையை இணைக்கும் ஏரியோலி மற்றும் வாஷி பாலங்கள் இடையே அமைந்துள்ளது.
முகத்துவாரப் பகுதி தவிர, இந்தத் திட்டத்தின் கீழ் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிலிருந்து 32.75 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியும் 77.30 ஹெக்டேர் வனமல்லாத நிலப்பகுதியும், துங்காரேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 0.6902 ஹெக்டேர் வன நிலப்பகுதியும் மற்றும் 4.7567 ஹெக்டேர் வனமல்லாத நிலமும் கையகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தேசிய வனவிலங்குகள் வாரியம் அனுமதி வழங்குவது குறித்த ஆய்வுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தன. அப்போது இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதிரடி உத்தரவு ஒன்றையும் வழங்கியது. வன நிலத்தை தொழில்துறை வளர்ச்சிக்காக அனுமதிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது. கூடவே, இத்திட்டத்திற்கான முன் நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
சரணாலயத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, 10 கோடி ரூபாய் (மும்பையில் ஒதுக்கப்பட்ட திட்டத்தின் அங்கமாக 500 கோடி ரூபாயில் 2 சதவீதம் ) செலுத்த வேண்டும்.
திட்டப்பகுதிக்கு வெளியில் எந்தக் குப்பைகளும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக வேலை தளத்தை தடுப்பு மதில்களை அமைக்க வேண்டும்.
இந்தத் திட்டத்திற்காக இழக்கவேண்டிய நிலையில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பதிலாக அதுபோல 5 மடங்கு மாங்குரோவ் காடுகளை வளர்ப்பதற்கான நிதியையும் இடத்தையும் வழங்க வேண்டும் போன்ற முக்கிய விதிகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக பெரும் நிதியை எளிய கடனாக ரூ.1 டிரில்லியன் தொகையை ஜப்பான் வழங்குகிறது. மும்பை, பாந்த்ரா குர்லா வளாகத்தில் தொடங்கி, குஜராத்தில் சபர்மதி ஆற்றின் கரையோரம் முடிவடையும் ரயில் பாதையின்நீளம் 508 கி.மீ. தொலைவு ஆகும்.
புல்லட் ரயில் பாதை, மஹாராஷ்டிரா மாநிலத்தில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 4.3 கி.மீ. தொலைவிலும் மாநிலம் முழுவதும் இதன் நீளம் 155.64 கி.மீ. தொலைவிலும் கடக்கிறது. அதேபோல குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், கேதா, ஆனந்த், வதோதரா, பாரூச், சூரத், நாவ்சரி மற்றும் வல்சாத் ஆகிய மாவட்டங்களின் வழியாக மொத்த 348.2 கி.மீ. தொலைவில் கடந்து செல்கிறது.
தமிழில்: பால்நிலவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT