Published : 19 Feb 2019 12:05 PM
Last Updated : 19 Feb 2019 12:05 PM
இந்த தேசத்துக்கு புல்லட் ரயிலைக் காட்டிலும், எல்லையில் காவல் காக்கும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு புல்லட் துளைக்காத ஆடைகள்தான் அவசியம் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
புல்வாமாவில், கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பின் கடந்த இரு நாட்களாக எந்த எதிர்க்கட்சியும் எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வந்தன.
இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகியவை உளவுத்துறை தோல்வியால்தான் இத்தகைய மிகப்பெரிய தாக்குதல் வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்று இப்போது குற்றம் சாட்டியுள்ளன.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு உளவுத்துறை உரிய நேரத்தில் தகவல் அளிக்காமல் தோல்விஅடைந்ததே காரணம். இதற்கு மத்தியஅரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது. உளவுத்துறையின் தகவல்களை ஒருங்கிணைக்க அரசால் ஏன் முடியவில்லை?
இப்போதுள்ள நிலையில் நம்முடைய தேசத்துக்கு, புல்லட் ரயில் தேவையில்லை. எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை புல்லட்களில் இருந்து காக்கும் ஆடைதான் அவசியம்.பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட மக்களும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதேநேரத்தில் நாட்டின் எல்லையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆதலால், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதைக் கூற வேண்டும். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்ட நிலையில், ஏன் ஆளும் பாஜக மட்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. தேர்தல் பிரச்சாரத்தை பாஜக முதலில் நிறுத்திவட்டு, எல்லையை எவ்வாறு பாதுகாப்பது என்பதை சிந்திக்க வேண்டும்''.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT