Published : 07 Feb 2019 08:14 AM
Last Updated : 07 Feb 2019 08:14 AM
டெல்லி பல்கலைக்கழகத்தில் நான்கு பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் அதன் தமிழ்ப் பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் இரண்டு பிரபல மகளிர் கல்லூரிகளில் இருந்த பேராசிரியருக்கான பணியிடங்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதால், அதன் தமிழ் துறைகள் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன.
லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் டெல்லியில் தமிழுக்காக ஏழு பள்ளிகள் உள்ளன. இதில் படித்து முடித்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வருபவர்களின் மேற்கல்விக்காக டெல்லியில் உள்ள கல்வி நிலையங்களில் பல வருடங்களாக தமிழ் மொழியில் சான்றிதழ், டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுக்கல்வி போதிக்கப்பட்டு வருகின்றன இவற்றில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சுமார் எட்டு வருடங்களாக ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதுதொடர்பான செய்தி கடந்த செப்டம்பர் 9, 2014-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியிடப்பட்டது. இதன் தாக்கமாக பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிட்டும், இதன் நேர்முகத்தேர்வு நடத்தப்படாமலேயே உள்ளது.
இதனிடையே, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பிரபல லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் 15 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றிருந்தார். மற்றொரு மகளிர் கல்லூரியான மிராண்டா ஹவுஸில் எட்டு வருடங்களுக்கு முன் தமிழ் பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றார். இந்த இரண்டு பணியிடங்களும் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு விட்டதால் அதன் தமிழ் பிரிவுகள் மூடப்பட்டு விட்டன. இது, நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களை நிர்வகித்து வரும் மத்திய அரசின் மத்திய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிரானது எனத் தெரியவந்துள்ளது.
எனினும், இதை தமிழர்களும், அம்மாநிலத்தின் அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தமிழ் கல்விக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், டெல்லிவாழ் தமிழர்கள் அவற்றில் சேர்ந்து தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். குறிப்பாக டெல்லியின் பிரபலமான 2 மகளிர் கல்லூரிகளிலும் தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பை பெண்களும் இழந்துள்ளனர். தமிழுக்கு, இந்தி உட்பட மற்ற மொழியாளர்களின் எதிர்ப்பும், காழ்ப்புணர்வும் இதற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவை உயர்த்த, தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் ஒரு சொற்பொழிவை துவக்க திட்டமிடப்பட்டது. இங்கு பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை அளிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் ஈடேறவில்லை எனினும், கடந்த 2007-ல், தமிழக அரசால் அளிக்கப்பட்ட ரூபாய் ஐம்பது லட்சத்தின் உதவியால் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கானப் பிரிவு துவக்கப்பட்டது. இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ள இங்கு டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் வந்து பயில மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், இங்கு கூடுதலாகப் பேராசிரியர்களை அமர்த்தாமல் இருப்பதால் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வெங்கடேஸ்வரா கல்லூரி மற்றும் தயாள் சிங் கல்லூரியிலும் தமிழுக்கானப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து ஐந்து முதல் பத்து வருடங்களில் இங்குள்ள பேராசிரியர்கள் ஓய்வு பெற்றால் அவையும் வேறு துறைகளுக்கு மாற்றும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT