Published : 10 Feb 2019 08:32 AM
Last Updated : 10 Feb 2019 08:32 AM

தெலங்கானா ஓட்டலில் அசத்தல் திட்டம்: உணவை மீதம் வைத்தால் ரூ.50 அபராதம்

தங்களது ஓட்டலில் உணவை மீதம்வைத்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் ரூ.50 வசூல் செய்து, அதனை அநாதை ஆசிரமத்துக்கு வழங்குவதை ஒரு வாடிக்கையாக கொண்டுள்ளது தெலங்கான ஓட்டல் நிர்வாகம்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ‘கேதாரி’ ஓட்டல் மிகவும் பிரபலமானது. இந்த ஓட்டலில் சிலர் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவை மீதம் வைத்துவிட்டு செல்வதை அந்த ஓட்டலின் உரிமையாளர் லிங்காலால் கேதாரி விரும்பவில்லை. இதனால், அவரது மூளையில் ஒரு திட்டம் தோன்றியது. யாராவது வாடிக்கையாளர்கள் உணவை பாதிக்கும்மேல் மீதம் வைத்தால், அவர்களுக்கு ரூ.50 அபராதம் வசூலிப்பது என முடிவு செய்தார். அப்படியாவது மக்கள் முழுமையாக வயிறு நிரம்ப சாப்பிட்டு செல்வார்கள் என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது.

இதற்கான அறிவிப்பு பலகைகளை தனது ஓட்டலில் ஆங்காங்கே வைத்தார். ஆயினும் சிலர் உணவை மீதம் வைத்தனர். அவர்களிடம் கறாராக ரூ.50 அபராதம் வசூலித்தார் கேதாரி. அப்படி இதுவரை ரூ.14,000 வரை வசூலித்த அபராதத் தொகையை அவர் சமீபத்தில் ஒரு அநாதை ஆசிரமத்துக்கு வழங்கி உள்ளார்.

தொடர்ந்து இந்த ஓட்டலில் இப்போதும் இது அமலில் உள்ளது. சிலர் அபராதம் செலுத்தியும் வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளர் லிங்காலால் கேதாரி கூறுகையில், “என்னுடைய ஓட்டலுக்கு வருவோர் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு வயிறார சாப்பிட வேண்டுமென்பதே எனது நோக்கம். ஆனால், இதில் சிலர் பேசுவதற்காக இடம் தேடி ஓட்டலுக்கு வந்து சாப்பாட்டை மீதம் வைத்து செல்கின்றனர். மேலும் சிலர், அலட்சியமாக சாப்பாட்டை மீதம் வைத்து விட்டு செல்கின்றனர். இவர்களுக்கு சாப்பாட்டின் அவசியத்தை உணர வைக்கவே நான் ரூ.50 அபராதம் வசூலிக்கிறேன். அதனை ஒரு நல்ல விஷயத்திற்காக செலவு செய்து வருகின்றேன்.

நான் இந்த அபராத திட்டத்தை அமல் படுத்தியபோது, எனக்கு சில எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றை நான் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் எனது வாடிக்கையாளர்கள் என்னை புரிந்து கொண்டனர். தற்போது அபராதம் செலுத்துவதும் ஓரளவு குறைந்துள்ளது” என மகிழ்ச்சியாக கூறினார் கேதாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x