Published : 06 Feb 2019 01:01 PM
Last Updated : 06 Feb 2019 01:01 PM
சமூக வலைதளங்களில் இணைவதை வெகுகாலமாகப் புறக்கணித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தற்போது ட்விட்டரில் இணைந்திருக்கிறார். கட்சித் தலைமை இன்று (புதன்கிழமை) இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
@SushriMayawati இதுதான் மாயாவதியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் ஹேண்டில்.
இது தொடர்பாக கட்சித் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், "ஊடகங்களுடனும் வெகுஜனத்துடனும் உடனுக்குடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் உடனுக்குடன் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகவும் மாயாவதி சமூக வலைதளத்தைத் தேர்வு செய்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் பெறும் நகர்வு:
2019 மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் மாயாவதி சமூக வலைதளத்தில் இணைந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
அண்மையில்தான் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஏற்கெனவே சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் இருக்கிறார். அவரை 8.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், மாயாவதியும் ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.
@SushriMayawati என்ற ட்விட்டர் ஹேண்டில் கடந்த அக்டோபர் 2018-லேயே பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றாலும்கூட இப்போதுதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஹேண்டிலில் இருந்து கடந்த ஜனவரி 22-ம் தேதி ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது. அதில், எதிர்காலத்தில் இதுவே மாயாவதியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளமாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்வீட்டில், "அன்பான சகோதர, சகோதரிகளே.. ட்விட்டர் குடும்பத்தினருக்கு என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். இதுதான் எனது தொடக்கம். @sushrimayawati இதுவே எனது அதிகாரபூர்வ ஹேண்டில். எதிர்காலத்தில் எனது கருத்துகள், தகவல் பரிமாற்றங்கள் இங்கே நடைபெறும். நன்றி" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
திடீர் பச்சைக்கொடி:
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென சமூக வலைதளங்களுக்குப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சிப் பெயரில் இயங்கிய சில சமூக வலைதளங்களைப் போலி கணக்குகள் என்று மாயாவதி அறிவித்தார். கட்சிக்கு அதிகாரபூர்வ இணையம், ஃபேஸ்புக் பக்கம், ட்விட்டர் பக்கம் என எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி தனது அரசியல் நிலைப்பாடுகளை இந்தி மொழியில் அறிக்கைகள் மூலம் தெரிவிக்கிறது. ட்விட்டரில் இத்தகைய வசதி இல்லையே என்று கூறி அப்போது மாயாவதி சமூக வலைதளங்களில் இணைய தயக்கம் காட்டி வந்தார். ஆனால், இப்போது அறிமுகக் குறிப்பு முதல் மாயாவதியின் அதிகாரபூர்வ பக்கத்தில் எல்லாமே ஆங்கிலத்தில்தான் பதிவிடப்பட்டுள்ளது என்பது முரண்.
இதுவரை பகுஜன் சமாஜ் கட்சி அதிகாரபூர்வமாக சமூக வலைதளங்களில் இயங்கவில்லையே தவிர ஆதரவு அமைப்புகள் உறுப்பினர்கள் தனித்தனியாக பல கணக்குகள் வாயிலாக கட்சிக்கு சமூக வலைதளத்தில் முட்டுக்கொடுத்தே வந்திருக்கின்றனர். 2017 உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் போதும் கட்சிப் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திரா மிஸ்ராவின் மருமகன் பாரேஷ் மிஸ்ரா தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் இயக்கப்பட்டன.
இதுதவிர தலித் மற்றும் அம்பேத்கர் இயக்க தன்னார்வலர்களும் மாயாவதிக்காக பற்பல ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களையும் வாட்ஸ் அப் குழுக்களையும் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT