Last Updated : 02 Feb, 2019 08:05 AM

 

Published : 02 Feb 2019 08:05 AM
Last Updated : 02 Feb 2019 08:05 AM

இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள், புதிய அறிவிப்புகள் மரபு மீறலா?- காங்கிரஸ் ஆட்சியிலும் முன்னுதாரணங்கள்

இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள், புதிய அறிவிப்புகளை அளிப்பது மரபு மீறும் செயல் எனப் புகார் எழுந்துள்ளது. இதற்கு முன் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் பலஉதாரணங்கள் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இடைக்கால பட்ஜெட் என்பது அரசு செலவு, ஊதியம் மற்றும் பென்ஷன் செலவுகளை சமாளிக்க வேண்டி தாக்கல் செய்யப்படுவது ஆகும். தேர்தல் வரும் நிலையில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இந்திய அரசியலமைப்பு சட்டம் 116(1)-ன் கீழ் வருகிறது.

இந்த சட்டத்தின்படி புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் அளிக்கக் கூடாது என விதிகள் இல்லை. எனினும், வழக்கமாக வருமான வரிவிலக்கு போன்ற முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கலின்போது மட்டும் அறிவிக்கப்பட்டு வந்தது. இவை, இடைக்காலப் பட்ஜெட்டில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை.

எனினும், நேற்று இடைக்கால நிதி அமைச்சரான பியூஷ் கோயல், தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேர்தலை மனதில் வைத்து பல சலுகைகளும் அறிவிப்புகளும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது மரபு மீறும் செயல் என்றும் புகார் எழுந்துள்ளது. இதை, பாஜக தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக இருந்து தற்போது கட்சியில் இருந்து வெளியேறி இருக்கும் யஷ்வந்த் சின்ஹாவும் புகார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிரபல சமூக சட்ட ஆய்வு நிறுவனமான ‘பி.ஆர்.எஸ் இந்தியா’வின் தலைவர் எம்.ஆர்.மாதவன் கூறும்போது, ‘‘இதற்கான சட்டத்தில் இடைக்கால பட்ஜெட் என எங்கும் குறிப்புகள் இல்லை. இதில் அறிவிப்புகள் அளிக்காமல் இருப்பதை ஒரு மரபு என பின்பற்றினாலும் அதை மீறப்பட்ட தருணங்களும் உண்டு. பாஜக தலைமையிலான ஆட்சியில் 2004-ல், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 2009, 2014-ம் ஆண்டுகளில் புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்தார்.

பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 2004-ல் இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்த ஜஸ்வந்த்சிங், மத்திய அரசு அலுவலர்களின் ஊதியத்தில் ஒரு பெரிய சலுகையை அறிவித்திருந்தார். அடுத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி2009-ல் ஏற்றுமதியாளர்களுக்கு வரிச்சலுகைஅளித்தார். 2014-ல் நிதியமைச்சரான ப.சிதம்பரம் ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை அறிவித்தார். அடுத்து வந்த மக்களவை தேர்தலில் வாக்குகள் பெறும் முயற்சியாகவே இந்த அறிவிப்புகள் கருதப்பட்டது. ஆனால், 2009-ல் மட்டுமே அதற்கானப் பலன்கிடைத்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x