Published : 25 Feb 2019 07:13 AM
Last Updated : 25 Feb 2019 07:13 AM
அதிமுக கூட்டணியில் ஏழு தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் பெற்ற பாமகவிடம் கவுரவம் பார்க்கும் நிலை தேமுதிகவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு தொகுதியாவது அதிகம் அளிக்கும் கூட்டணியில் சேர விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை செய்தபின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிமுடிவு எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘ஐந்து தொகுதிகள் அளித்து தேமுதிகவை இழுக்க திமுக எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கூடுதல் தொகுதிகள் அளிக்க எங்கள் பங்கை குறைக்க திமுக கோருகிறது. இதுபற்றி ராகுலுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க டெல்லி வரவுள்ளார் ஸ்டாலின்’’ எனத் தெரிவித்தனர்.
கடந்த 1999-ல் பாஜக தலைமையில் ஒன்றிணைந்த தேசிய ஜனநாயகக்கூட்டணிக்காக குறைந்த பட்ச பொதுச்செயல் திட்டம் உருவாக்கினார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அதேபோன்ற செயல் திட்டத்தை 2004-ல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஏற்படுத்தியது. இதுபோல் ஒரு திட்டத்தை மீண்டும் ஏற்படுத்த எதிர்கட்சிகளுடன் காங்கிரஸ் சில தினங்களில் ஆலோசிக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வரும் ஸ்டாலின், தேமுதிக பற்றி ராகுலுடன் ஆலோசிக்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கு முன்பாக, தான் போட்டியிடும் தொகுதிகளை குறைத்து அதை அதிமுக அளிக்க முன்வந்தால் அவர்களுடன் தேமுதிக சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிமுக கூட்டணியில் இணைந்து கடந்த 2011–ல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது. பிறகு அதிமுகவிடம் இருந்து வெளியேறிய விஜயகாந்த், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டார். இதில் அவருக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இதனால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, 2016 சட்டப்பேரவையில் தன் தலைமையில் மக்கள்நலக் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதிலும் அதற்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. எனினும், அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ள பாமகவிற்கு அளிக்கப்பட்டதை விடவும் குறைவான தொகுதிகள் பெறுவதை தேமுதிக கவுரவக் குறைச்சலாகக் கருதுகிறது. பாமகவை விட ஒரு தொகுதியாவது அதிகம் தரும்கூட்டணியில் சேர்வதே தனது எதிர்காலத்திற்கும் நல்லது என தேமுதிக எண்ணுகிறது.
அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகளில் தாம் விரும்பும் எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்கவில்லைஎனில், மக்களவை தேர்தலை புறக்கணிக்கவும் தேமுதிக திட்டமிட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தம் ஆதரவாளர்களிடம் அனைத்து கூட்டணியிலும் ஊழல் கட்சிகள் இருப்பதாகவும், இதனால் நோட்டாவிற்கு வாக்களித்து விட்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் தேமுதிக அறிக்கை அளித்து விட்டு அமைதியாகிவிடும் வாய்ப்புகளும் தெரிகின்றன. அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அல்லது தனியாக முழுமூச்சுடன் போட்டியிடவும் தேமுதிக முடிவு செய்திருப்பதாக அதன் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT