Published : 13 Feb 2019 05:28 PM
Last Updated : 13 Feb 2019 05:28 PM
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு வைத்து, மோடி அரசை வீழ்த்தத் திட்டம் வரும் நிலையில், அவரின் தந்தை முலாயம் சிங் யாதவ் மக்களவையில் இன்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இது சமாஜ்வாதிக் கட்சிக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணிக்குள் மிகப்பெரிய குண்டு வீசியுள்ளார். மோடியைப் புகழ்ந்து முலாயம் சிங் பேசியபோது, அவருக்கு வலதுபுறம் சோனியா காந்தி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. மக்களவையில் இன்று சமாஜ்வாதிக் கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், "பிரதமர் மோடியின் செயல்பாடுகளை, சேவையை நான் வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்.
பிரதமர் மோடி மட்டுமல்ல இங்குள்ள அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அவைக்கு வர வேண்டும்.
நான் பிரதமர் மோடியை எப்போதெல்லாம் சந்தித்துப் பேசியிருக்கிறேனோ, அப்போதெல்லாம் என்னுடைய பணியை, நான் சொல்வதை உடனுக்குடன் செய்துள்ளார் " எனத் தெரிவித்தார்.
பாஜகவைக் கடுமையாக சமாஜ்வாதிக் கட்சி உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதிர்த்து வருகிறது. மத்திய அரசையும், அகிலேஷ் யாதவ் விமர்சித்து வரும் நிலையில், அவரின் தந்தை முலாயம் சிங் யாதவ் மோடியைப் பாராட்டிப் பேசியது எம்.பி.க்கள் அனைவருக்கும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
முலாயம் சிங் வாழ்த்திப் பேசியதும், இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி இரு கை கூப்பி, தலைவணங்கி முலாயம் சிங் யாதவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏனென்றால், டெல்லியில் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜக அரசுக்கு எதிராகப் பேரணி நடத்தியது. அந்தப் பேரணியில் சமாஜ்வாதிக் கட்சியும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்று, மோடி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தது.
மக்களவைத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் பாஜகவை எதிர்க்க, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியோடு, சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அனைத்து தளங்களிலும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜகவை எதிர்த்து வரும் நிலையில் அவரின் தந்தை முலாயம் சிங் யாதவ் மோடியை பாராட்டிப் பேசியுள்ளது தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா, காங்கிரஸ், சமாஜ்வாதி இடையிலான நட்புறவில் விரிசலை உண்டாக்குமா என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT