Published : 02 Feb 2019 08:33 PM
Last Updated : 02 Feb 2019 08:33 PM
விசா மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்கள் குறித்த தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அவர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளது.
“கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் நலம் மற்றும் கவுரவம் குறித்து கவலையடைகிறோம். இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டோரை சந்திக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம், மேலும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் விருப்பத்துக்கு எதிராக அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறோம்” என்று இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிப்பதாகக் கூறி, ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் போலி விசாவில் தங்கியிருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். அவர்களைக் கண்டுபிடிக்க ட்ரம்ப் நிர்வாகம் நூதன நடவடிக்கையை மேற்கொண்டது.
இதற்காக ஹோம்லாந்து காவல்துறை மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் போலியான கல்வி நிறுவனத்தை உருவாக்கியது. இதில் வழக்கமான பாடத் திட்டங்களோ, வகுப்புகளோ இருக்காது. மாணவர்களும் படிக்கமாட்டார்கள்.
இதுகுறித்து அறிந்துகொண்டே, இதில் சேர 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் எஃப் 1 விசாவை நீட்டித்து அமெரிக்காவிலேயே தங்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.
இவர்களில் 130 பேரை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்கத் துறை நேற்று காலை (வெள்ளிக்கிழமை) கைது செய்தது. இதில் 129 பேர் இந்தியர்கள். மற்றொருவர் பாலஸ்தீனியர். இவர்கள் அனைவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியா, “தேர்வு செய்பவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டவர்களையும் தெரியாமல் பல்கலையில் என்ரோல் செய்தவர்களையும் பிரித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம், மாணவர்களின் நலனே இப்போது உயர்ந்தபட்ச முன்னுரிமையாக உள்ளது” என்று கூறியுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேரை சந்தித்துள்ளனர். மற்றவர்களையும் நேரில் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT