Last Updated : 16 Feb, 2019 04:56 PM

 

Published : 16 Feb 2019 04:56 PM
Last Updated : 16 Feb 2019 04:56 PM

சிஆர்பிஎப் மீதான தாக்குதல் எதிரொலி; போர் வந்தால் மீண்டும் பணியில் சேரத் தயார்: ஓய்வுபெற்ற ராணுவத்தினர் அறிவிப்பு 

பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், மீண்டும்  பணியில் சேரத் தயாராக இருப்பதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ‘வாய்ஸ் ஆப் எக்ஸ்-சர்வீஸ்மென் சொசைட்டி’ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையாக சிஆர்பிஎப்பின் 44 வீரர்கள் பலியாகி உள்ளனர். மிக அதிகமான எண்ணிக்கையிலான இந்த பலியால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் இடையே பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்ரோஷம் எழுந்துள்ளது.

இதன் மீது இன்று காலை டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், இந்திய ராணுவம் எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஆதரவளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குக் காரணமாக பாகிஸ்தான் மீது மீண்டும் துல்லியத் தாக்குதல் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாதத்தை அடக்க தாம் மீண்டும் பணியில் சேரத் தயராக இருப்பதாக ஓய்வுபெற்ற ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதன் மீது அதன் சங்கங்களில் ஒன்றான ‘வாய்ஸ் ஆப் எக்ஸ்-சர்வீஸ்மென் சொசைட்டி’ சார்பில் இன்று அறிக்கை வெளியாகி உள்ளது.

இச்சங்கத்தின் துணைத்தலைவரும் விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றவருமான எஸ்.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், ''சிஆர்பிஎப் வீரர்கள் மீதான புல்வாமா தாக்குதலால் ‘வாய்ஸ் ஆப் எக்ஸ்-சர்வீஸ்மென் சொசைட்டி’ மிகுந்த துயரம் அடைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்.

மேலும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் மத்திய அரசுக்கு எங்கள் முழு ஆதரவை தெரிவிக்கிறோம்.

தேவைப்பட்டால் ராணுவத்தில் மீண்டும் சேர எங்கள் விருப்பத்தை தெரிவிக்கிறோம். மத்திய அரசு அனுமதித்தால் நாங்கள் ஜம்மு காஷ்மீர் செல்லவும் அங்கு போரிடவும் தயாராக உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x