Last Updated : 01 Feb, 2019 08:03 AM

 

Published : 01 Feb 2019 08:03 AM
Last Updated : 01 Feb 2019 08:03 AM

ராகுலின் குறைந்தபட்ச ஊதியம் வாக்குறுதி சாத்தியமா?- போட்டி அறிவிப்புகளால் சூடுபிடிக்கிறது நாடாளுமன்ற தேர்தல் களம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் பாஜக-வும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இக்கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் இருந்து வருகின்றன. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதஇடஒதுக்கீட்டை பாஜக அறிவித்ததும், தேர்தல் களத்தில் பிரியங்காவை இறக்கியது காங்கிரஸ்.

மேலும் ஜிஎஸ்டி வரியை மாற்றியமைப்போம், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம், விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று ராகுல்காந்தி வெளியிட்டு வரும் அறிவிப்புகள் தேசிய அரசியலில் இன்னும் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அவர் வெளியிட்ட ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்ற வாக்குறுதி வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த வாக்குறுதி சாத்தியமா? என்றொரு விவாதமும் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் (‘யுனிவர்சல் பேசிக் இன்கம் UBI) என்ற திட்டமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏழைகளைக் கண்டறிந்து அவர் களது வங்கிக் கணக்கில் நேரடியாக குறைந்தபட்ச தொகையை மாதந்தோறும் செலுத்துவது தான் இத்திட்டத்தின் நோக்கம்.

உலக அளவில் 2 அமெரிக்க டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் ஏழைகளாக கருதப்படு கின்றனர். அதாவது, இந்திய மதிப்புக்கு நாள் ஒன்றுக்கு 143 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ள வர்கள் ஏழைகள். இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகையில் 39 கோடி பேர் ஏழைகள் என்று 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இவ்வளவு பேருக்கும் மாதந்தோறும் நிதி அளிப்பது சாத்தியமா என்பது விவாதப் பொருளாக உள்ளது. உலக அளவில் பின்லாந்து, கனடா, கென்யா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய திட்டம் பரீட்சார்த்த முறையில் அமல்படுத் தப்பட்டுள்ளது. இதில் பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடு களில் இத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

காங்கிரஸால் எப்படி இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்று அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்தியாவில் உணவு மானியத்திற்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. அந்த தொகையில் மாற்றம் செய்யப்பட்டு ராகுல் அறிவித்துள்ள வாக்குறுதிக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கின்றனர். ராகுலின் அறிவிப்புக்கு மக்கள்மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதை முறியடிக்க விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை தேர்தலுக்கு முன்பாக வெளியிட பாஜக அரசு முயன்று வருகிறது. ஏற்கெனவே பேசப்பட்டு வரும் ‘யுனிவர்சல் பேசிக் இன்கம்’ திட்டத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்து பாஜக-வே அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உணவு மானியத்திற்கு செல வழிக்கப்படும் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்துக்கு செலவாகும் ரூ.55 ஆயிரம்கோடியை மாற்றி அமைத்து இத்திட்டத்தை பாஜக அரசே அமல்படுத்த முயற்சி எடுப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் மக்களின் நம்பிக்கையைப் பெற பாஜக-வும், காங்கிரஸும் மேற்கொண்டு வரும் போட்டி அறிவிப்புகளால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x