Last Updated : 26 Feb, 2019 06:05 PM

 

Published : 26 Feb 2019 06:05 PM
Last Updated : 26 Feb 2019 06:05 PM

டெல்லியில் கமல்ஹாசன் திடீர் முகாம்: பிரகாஷ் காரத், கேஜ்ரிவாலை சந்திக்கிறார்

டெல்லியில் கமல்ஹாசன் திடீரென முகாமிட்டுள்ளார். தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ரத்தானதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் சந்திப்பு நடத்துகிறார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளின் தலைமையில் முக்கிய இரண்டு கூட்டணிகள் அமைந்து வருகிறது. இதனுடன் சேராத மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் யாருடனும் கூட்டணி அமைக்க முடியாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இரண்டு முக்கியக் கூட்டணிகளும் அமைந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின் மூன்றாவது கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் தெரியவரும். இதற்குத் தலைமை ஏற்பது யார் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் இன்று காலை டெல்லி வந்தடைந்தார். இங்கு அவர் கலந்துகொள்ள இருந்த செய்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி இன்று கடைசி நேரத்தில் திடீர் என ரத்தானது.

எனினும், தனது டெல்லி விஜயத்தை கமல் வீணாக்க விரும்பவில்லை. இதன் பலனை மக்களவைத் தேர்தலுக்காகப் பயன்படுத்த வேண்டி அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தை சந்திக்க கமல் முடிவு செய்தார். இந்தச் சந்திப்பு டெல்லியின் சிபிஎம் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இதையடுத்து கமல் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மரியாதை நிமித்தமானதாகக் கூறப்படும் இந்தச் சந்திப்பில் மக்களவைத் தேர்தல் குறித்த பேச்சுகளும் இடம்பெற உள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், தமிழகத்தில் போட்டியிட கூட்டணி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் கமல் கண்டிப்பாகப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎம் தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து போட்டியிட உள்ளது. இதற்காக திமுக கூட்டணியில் ஒரு தொகுதி சிபிஎம் கட்சிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, அக்கட்சியின் பிரகாஷ் காரத் உடனான சந்திப்பில் கமலுக்கு உடனடியாகப் பலன் கிடைக்க வாய்ப்புகள் இல்லை.

ஆம் ஆத்மி, யாருடனும் கூட்டு சேராமலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யாமலும் உள்ளது. இது குறித்து ஆலோசனை செய்ய ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் வசீகரன் நாளை டெல்லி வரவிருக்கிறார். இந்நிலையில், ஆம் ஆத்மியுடன் கமல் இணைந்து போட்டியிட வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதற்கு, இந்த இரண்டு தலைவர்களின் கட்சிகளுமே ஒத்த கருத்துள்ளவர்களாகக் கருதப்படுவது காரணம் ஆகும்.

இதில் கடந்த 2014-ல் தமிழகத்தின் 24 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கு ஒன்றில் கூட வெற்றி கிடைக்கவில்லை. கமலின் புதிய கட்சி முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x