Published : 12 Feb 2019 04:25 PM
Last Updated : 12 Feb 2019 04:25 PM
கிராம திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலியான சம்பவம் பீகார் மாநிலத்தில் நேற்றிரவு நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் இன்று காலைமுதல் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் விவரம் வருமாறு:
பீகார் மாநிலத்தின் ஹாஜிப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள டிக்கி எனும் கிராமத்தில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் நேற்று மாலை முக்கிய நிகழ்ச்சியாக சிலை கரைப்புக்கான ஊர்வலம் நடந்தது. இவ் ஊர்வலத்தில் யார் முதலில் நடனமாடுவது என்பதில் இருவேறு தரப்புக்கிடையே போட்டி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போட்டி சிறு சண்டையாக உருவாகி பின்னர் கலவரமாக வெடித்தது.
அப்போது, கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார். 4 பேர் துப்பாக்கி குண்டடிப்பட்டு படுகாயமுற்றனர். இவர்கள் தற்போது பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் சாந்தி குமாரி என்று அடையாளங் காணப்பட்டுள்ளார். இவரது உறவினர் இதுகுறித்து தெரிவிக்கையில் இது சாதிவிரோதத்தில் ஏற்பட்ட பிரச்சினை என்று தெரிவித்தார்.
இக்கலவரம் தொடர்பாக 11 பேர் கைதாகியுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் என்எச்19 நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT