Published : 14 Feb 2019 08:45 AM
Last Updated : 14 Feb 2019 08:45 AM
மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் தங்கள் பலத்தைக் காட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போராட்டம் நடத்துவதாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், தேர்தலுக்குப் பிறகு தனிமெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பிரதமராகும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அக்டோபர் 30, 2013-ல் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதவாத சக்திகளை எதிர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. 17 அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டம், அடுத்த வந்த மக்களவைத் தேர்தலில் அமைக்கும் மூன்றாவது அணிக்கான முயற்சியாக இருந்தது.
இதற்கு முந்தைய மக்களவைத் தேர்தலுக்காக உ.பி.யின் அலகாபாத்தில் ஏப்ரல் 23, 2007-ல் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தினார். இதிலும் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியாக 11 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், இந்த இரு மக்களவைத் தேர்தலிலும் மூன்றாவது அணி அமைக்க முடியாமல் போனது. எனினும், இந்தமுறை மதநல்லிணக்கக் கூட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானக் கூட்டங்களாக மாறியுள்ளன.
இவற்றை எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து நடத்தாமல், தனித்தனியாக நடத்தத் தொடங்கியுள்ளனர். இத்துடன் அவை தாமே பிரதமராகும் முயற்சிக்கானதாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இது குறித்து 'இந்து தமிழ்' நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''இந்தமுறை எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் முக்கியத்துவம் பெற்றாலும் அதன் தலைமையை மற்றவர்கள் ஏற்க விரும்பவில்லை. இதற்கு தேர்தலுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தால் அக்கட்சித் தலைவர்களே பிரதமராகத் திட்டமிடுகின்றனர்.
இதற்கு ஏதுவாக இப்போது தங்கள் தனிப்பட்ட பலத்தைக் காட்ட மோடி எதிர்ப்புக் கூட்டம் நடத்துகின்றனர். இதன் இறுதியில் நாமும் அதுபோல் ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.
இந்தமுறை மக்களவைத் தேர்தலுக்காக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி தீவிரமாக இல்லை. இதற்காக முயற்சிக்கும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவிற்கு பெரிய அளவில் ஆதரவில்லாமல் உள்ளது. எனவே, இந்தமுறை எதிர்க்கட்சிகள் பெரும்பாலான மாநிலங்களில் தனித்தே போட்டியிடும் நிலை உள்ளது. இதன் முடிவுகளில் யாருக்கும் தனிமெஜாரிட்டி கிடைக்காமல் தேர்தலுக்குப் பின் ஒரு புதிய கூட்டணி உருவாகி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், அதன் பிரதமராக தாங்களே அமரும் பொருட்டு பலத்தைக் காட்டும் கூட்டங்களாக எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் அமைந்துள்ளன. இக்கூட்டத்தை நடத்தும் கட்சிக்கு மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் வந்திருந்து ஆதரவளித்து வருகின்றனர்.
மம்தா தொடங்கியது
இந்தவகையில், கடந்த பிப்ரவரி 19-ல் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா நடத்திய கொல்கத்தா கூட்டம் ஒரு தொடக்கமாக அமைந்தது. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திராவின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன் தினம் டெல்லியில் தர்ணா போராட்டம் தொடங்கினார்.
ஆம் ஆத்மி கூட்டம்
இதன் மூன்றாவது கூட்டமாக நேற்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்மாநில முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நடத்தியுள்ளார். இதுபோல் மேலும் பல எதிர்ல்கட்சிகளின் கூட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
எதிரணியில் சேராத அதிமுக
இதனிடையே, முந்தைய இரண்டு மக்களவைத் தேர்தல் சமயத்திலான கூட்டங்களில் உ.பி.யில் மட்டும் அதிமுக சார்பில் மறைந்த அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அடுத்த கூட்டத்தில் அவரது உரையை தற்போதையை பொதுச்செயலாளர் வாசித்தார். இந்தமுறை அதிமுக எதிரணியில் இருந்தும், அதன் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT