Last Updated : 19 Sep, 2014 10:13 AM

 

Published : 19 Sep 2014 10:13 AM
Last Updated : 19 Sep 2014 10:13 AM

கூட்டணியால் சுயமரியாதைக்கு பங்கம் வரக்கூடாது: அமித் ஷா பேச்சு

சுய மரியாதைக்கு பங்கம் வரும் வகையில், தேர்தல் கூட்டணி இருக்க கூடாது. மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து சிவசேனா கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியி டம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. சிவசேனா கட்சியுடன் தொகுதி உடன்பாடு குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

இந்நிலையில், மும்பையில் இருந்து நேற்று காலை கோல்ஹாபூருக்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷா, விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஊழலுக்கு மேல் ஊழல் புரிந்துள்ளது. அந்த அரசை விரட்ட, வலிமையான கூட்டணியுடன் ஒருமித்த கருத்துடன் பணியாற்ற வேண்டும். இந்த முறை மகாராஷ் டிரத்தில் பாஜக அரசு அமையும்.

அதற்கேற்ப சிவசேனா கட்சியு டனான தொகுதி உடன்பாடு குறித்து விரைந்து முடிவெடுக்கும்படி, மாநில பாஜக தலைவர்கள் தேவேந்திர பத்நாவிஸ் மற்றும் வினோத் டாவ்தேவிடம் வலியுறுத்தி உள்ளேன். நாங்கள் (பாஜக) 2 அடி முன்னெடுத்து வைத்துள்ளோம். அதேபோல் சிவசேனா தலைவர்களும் 2 அடி முன்னெடுத்து வைக்க வேண்டும்.

அதேநேரத்தில் 2 கட்சிகளின் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்படாத வகையில், சிவசேனா கட்சி விரைந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தின் நன்மைக்காக, கூட்டணி குறித்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக தீர்வு காண வேண்டும். அதற்கு இரு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முடிவெடுக்க வேண்டி யது மிகவும் அவசியம்.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை, மகாராஷ்டிர மக்கள் இந்த முறை தூக்கியெறிய வேண்டும். கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் மாநிலத்தை காங்கிரஸும் தேசிய வாத காங்கிரஸும் அழித்து விட்டன. ஊழல் குறித்து முறையான விசாரணை நடத்தினால், அந்த இரு கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் சிறையில்தான் இருப்பார்கள்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அரசியலை வியாபாரமாக்கி விட்டார். அவரை போல் அரசியலை வியாபார மாக்கிய தலைவர் நாட்டில் வேறு யாரும் இல்லை. துணை முதல்வர் அஜித் பவாருக்கு, மகாராஷ் டிரத்தில் நடந்த ஊழலில் தொடர்பு இருக்கிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

பின்னர் கோல்ஹாபூரில் அமித் ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கர்வீர் நிவாசினி மகா லட்சுமி கோயிலில் அமித் ஷா தரிசனம் செய்தார்.

கோல்ஹாபூரில் பாஜக தொண்டர்களைச் சந்தித்த பின்னர் நேற்று மாலை புனேவில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x