Last Updated : 13 Feb, 2019 08:42 AM

 

Published : 13 Feb 2019 08:42 AM
Last Updated : 13 Feb 2019 08:42 AM

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் 12 வருடங்களாக இயக்குநர் இன்றி முடக்கம்; மத்திய நிதி ரூ.25 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக குறைந்தது: கருணாநிதி தொடங்கியதால் கண்டுகொள்ளாத அதிமுக அரசு

திமுகவின் தலைவர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டதற்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அதிமுக அரசு கண்டுகொள்வதில்லை எனத் தமிழறிஞர்களிடையே புகார் எழுந்துள்ளது.

இது தெ ாடங்கியது முதல் 12 வருடங்களாக நிரந்தர இயக்குநர் அமர்த்தப்படாமல் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், மத்திய அரசிடம் கிடைத்து வந்த நிதி ரூ.25 கோடியில் இருந்து வெறும் இரண்டு கோடி ரூபாயாகக் குறைந்த அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கி.நாச்சிமுத்து கூறும்போது, ‘‘திமுக தலைவரால் அந்நிறுவனம் அமைக்கப்பட்ட காரணத்திற்காக 2011 முதல் நீடிக்கும் அதிமுக ஆட்சியால் புறக்கணிக்கப்படுகிறது. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வராமையால் ஒரு நிர்வாகக்குழு கூட்டமும் நடைபெறவில்லை.

கடந்த வருடம் இதை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க மத்திய அரசு எடுத்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தற்போதைய முதல்வர் பழனிசாமி நடத்திய ஒரே ஒரு கூட்டத்தாலும் நிறுவனம் முடங்கும் நிலையை தடுத்துநிறுத்த முடியவில்லை. இதை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளன’’ எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் 2004-ம் ஆண்டு தமிழ் மொழி இடம்பெற்றது. பிறகு அதன் வளர்ச்சிக்காக 2006-ல் அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழக முதல்வராக வருபவர்கள் இதன் நிரந்தரத் தலைவர் ஆவர். அவரது பரிந்துரைகள், ஆலோசனைகளின் பெயரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்நிறுவனத்தை நிர்வாகிக்கும். எனினும், இதற்கு ஒரு நிரந்தர இயக்குநர் அமர்த்தாமலும், நிர்வாகத்தில் முறையான கவனம் செலுத்தாமலும் அது முடங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதன் மீதான செய்தி கடந்த வருடம் ஏப்ரல் 11-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியாகியும் அதை மத்திய அரசும், தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் முதுநிலை ஆய்வறிஞரான பேராசிரியர் இரா.கோதண்டராமன் கூறும்போது, ‘‘தொடக்கம் முதல் 14 வருடங்களாக தமிழுக்கே சம்மந்தம் இல்லாத ஐஐடியின் பொறியியல் பேராசிரியர்கள் ஆறு பேர் இதுவரை பொறுப்பு இயக்குநர்களாக அமர்த்தப்பட்டனர். பொறுப்பு என்பதால் தம் முழு அதிகாரத்தையும் இவர்கள் பயன்படுத்தாமல் அந்நிறுவனம் அழியும் நிலையில் உள்ளது. 16 ஆய்வறிஞர்கள் இருந்த இடத்தில் இப்போது ஒருவர் கூட இல்லை. 150 நிரந்தர அலுவலர்களுடன் செயல்பட வேண்டிய நிறுவனத்தில் வெறும் 40 பேர் மட்டும் தொகுப்பூதியப் பணியில் உள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

தற்போது கூட திருச்சி என்ஐடியின் பதிவாளரான ஏ.பழனிவேல் பொறுப்பு இயக்குநராக கடந்த இரண்டு வருடங்களாக நீடிக்கிறார். இதுபோன்ற குறைகளால், கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.74.5 கோடி பெற்ற நிறுவனத்தால் ரூ.35 கோடி மட்டுமே செலவழிக்க முடிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x