Published : 09 Feb 2019 04:17 PM
Last Updated : 09 Feb 2019 04:17 PM
ராமர் கோயில் விவகாரம் நம்பிக்கை சார்ந்தது. சபரிமலை விவகாரம் பாரம்பரியப் பழக்கம் சார்ந்தது என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், "அயோத்தி பிரச்சினை நம்பிக்கை சார்ந்தது. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று ஒரு தரப்பினர் நம்புகின்றனர். அதனாலேயே அவர்கள் அந்த இடத்தின் மீது உரிமை கோருகின்றனர்.
சபரிமலை பிரச்சினையோ அரசியல் சாசன மதிப்பீடுகளுக்கு எதிராக கடைபிடிக்கப்படும் பாரம்பரியப் பழக்கம் சார்ந்தது. நம்பிக்கையையும் பாரம்பரியப் பழக்கத்தையும் குழப்ப வேண்டாம்.
நான் மதத்தின்பால் அதிக ஈடுபாடு கொண்ட நபர் அல்ல. சட்டத்துக்கு உட்பட்ட விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தலையீட்டை நான் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், சாதாரண குடிமக்களையோ அல்லது கட்சித் தொண்டர்களையோ அவர்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடாது என்று எப்படி நாங்கள் தடுக்க முடியும்?
அயோத்தி ராமர் பிறந்த இடம் என்று ஒரு தரப்பு கோருவதைப் போல் இன்னொரு தரப்பினர் அங்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே மசூதி இருந்தது என்கின்றனர். அலகாபாத் நீதிமன்றம் சிக்கல் என்று பட்டியலிட்ட விவகாரங்களை உச்ச நீதிமன்றம் தீர்க்க முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
அலகாபாத் நீதிமன்றம் குறிப்பிட்ட பல பிரச்சினைகள் சட்டத்தால் தீர்வு காணக்கூடியதே. ஆனால், நம்பிக்கை சார்ந்த பிரச்சினையையும் பாரம்பரியப் பழக்கம் சார்ந்த விவகாரத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுக முடியாது என நினைக்கிறேன்" என்றார் சிதம்பரம்.
பசுவதையில் ஈடுபட்டதாக மூன்று பேர் மீது மத்தியப் பிரதேச அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து பேசிய ப.சிதம்பரம், "இது மிகவும் தவறானது. அதை மாநில அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம். ஒரு தவறு நடந்தால் அதை தலைமை சுட்டிக்காட்டுவதே சரியானதாக இருக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT