Published : 22 Feb 2019 10:16 AM
Last Updated : 22 Feb 2019 10:16 AM
புல்வாமா தீவிரவாத தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக மீது புகார் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தற்கொலைப்படைத் தீவிரவாதி, கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்திய கார் குண்டு தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், மத்தியில் ஆளும் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள பாஜக இந்த தாக்குதலை வைத்து அரசியல் லாபம் அடையும் முயற்சியில் இறங்கியிருப்பதாக புகார் கிளம்பியுள்ளது.
தாக்குதல் நடந்த அன்று மாலை பாஜக தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதேதினம் இரவு, பிரயாக்ராஜில் ஒரு கலைநிகழ்ச்சியில் பாஜகவின் டெல்லி எம்பியும் போஜ்புரி மொழி திரைப்பட நடிகருமான மனோஜ் திவாரி, ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். உபி முதல்வரான யோகி ஆதித்யநாத்தும் அன்று தன் அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யவில்லை. இது தொடர்பாக சர்ச்சை கிளம்பிய நிலையில், பிப்ரவரி 15-ல் பாஜக அதன் அரசியல் நிகழ்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், டெல்லியில், ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் துவக்க விழா உள்ளிட்ட அரசு விழாக்களில் பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பதிலடி அளித்திருந்தார். தொடர்ந்து தன் அடுத்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மோடி, ‘‘பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதில் காங்கிரஸை போல் பின் தங்கியிருக்க போவதில்லை’’ எனவும் தெரிவித்தார். இதுபோன்ற பேச்சால் மோடி, மக்களவை தேர்தலில் பலன்பெறும் வகையில் அரசியல் ஆதாயம் தேடுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா கூறும்போது, ‘‘கடந்த 2001-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதலுக்கு மறுநாள் அவையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. அதற்கான ஆலோசனையில் அரசு செயல்பாடுகளை முடக்குவது பாகிஸ்தானுக்கு ஆதரவாகி விடும் என்பதால் கட்சிகளின் செயல்பாடுகள், கொண்டாட்டங்களை மட்டும் நிறுத்தி வைக்கலாம் என முடிவானது. அதை பாஜக இப்போது கடைப்பிடிக்காததுடன் தாக்குதல் தொடர்பாக அரசு விழாக்களில் பேசி அரசியல் லாபம் அடையவும் முயல்வது கண்டிக்கத்தக்கது’’ எனத் தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலை அடுத்துமத்திய அரசிற்கு முழுஆதரவு அளிப்பதாக எதிர்கட்சிகள் அறிவித்திருந்தன. தொடர்ந்து தங்கள் கட்சிகளின் முக்கிய நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தன. சம்பவத்தன்று காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா உ.பி.யின் லக்னோவில் முதன்முறையாக செய்தியாளர்கள் சந்திப்பு வைத்திருந்தார். இந்த தாக்குதல் காரணமாக பலியான வீரர்களுக்கு செய்தியாளர்கள் கூட்டத்தில் அஞ்சலி மட்டும் செலுத்திவிட்டு கிளம்பிச் சென்று விட்டார். டெல்லியில் வெளிநாடுகளின் தூதர்களுடன் வைத்திருந்த விருந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புல்வாமாவில் பிற்பகல் 3.10 மணிக்கு தாக்குதல் நடந்த பின்பும் பிரதமர் மோடி மாலை 6.40 மணி வரை உத்தராகண்டின் ஜிம் கார்பட் தேசிய வனவிலங்கு பூங்காவில் தன்னை பற்றிய ஆவணத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்ததாக காங்கிரஸும் புகார் கூறி உள்ளது. ‘இதுபோன்ற பிரதமர் உலகில் உண்டா?’ எனவும் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT