Published : 27 Feb 2019 03:15 PM
Last Updated : 27 Feb 2019 03:15 PM
எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால் நாளை (வியாழக்கிழமை) குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாகோட் தீவிரவாத முகாம்களை தாக்கி தகர்த்தது.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் விமானி ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இத்தகைய சூழலில் நாளை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டமும் பேரணியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமேதி சென்றிருந்த பிரியங்கா காந்தி லக்னோவில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். முதல் சந்திப்பு என்றதால் மிகுந்த எதிர்பார்ப்பை அது ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், புல்வாமாவில் தாக்குதல் நடந்ததால் இது அரசியல் பேசுவதற்கான நேரமில்லை என்று கூறி பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தார்.
தற்போது குஜராத் காரிய கமிட்டி கூட்டமும் மேலும் ஒரு நெருக்கடி நிலையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, பிரியங்காவுக்கான அரசியல் முக்கியத்துவ வாய்ப்பு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
போர் பதற்றத்தை பரப்ப வேண்டாம்:
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்கள் போர் பதற்றத்தை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
அந்த ட்வீட்டில், "நாளுக்குநாள் அதிகரித்துவரும் போர் குறித்த கூட்டுமனோபாவத்தால் வெறுப்பு பிரச்சாரங்களுக்கும் போலி செய்திகளுக்கும் மக்கள் இரையாகின்றனர். இத்தகைய செய்திகளை பொதுமக்கள் பகிர்வதில் அடக்கம் காட்டுமாறு வேண்டுகிறோம். இந்திய அரசாங்கமே அதிகாரபூர்வமாக ஏதாவது அறிவிக்கும் வரையிலும் இத்தகைய செய்திகளைப் பகிர வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT