Published : 05 Feb 2019 11:24 AM
Last Updated : 05 Feb 2019 11:24 AM
இனி தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் தெலுங்கு தேச கட்சிக்காக எப்போதும் திறக்காது எனப் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "5 ஆண்டுகளுக்கு முன்னதாக அமித் ஷா எப்படி இருந்தார் என்று நமக்குத் தெரியும். இப்போது அவருக்கு பெரும் பதவி கிடைத்துவிட்டதால் ஏதோ மகா சக்தி கிடைத்துவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவை எங்களுக்காக திறக்கவும் என்று நான் எப்போதாவது அமித் ஷாவிடம் கேட்டேனா? இல்லை வாய்க்கு வந்ததை எல்லாம் அமித் ஷா பேசுகிறார்.
மக்களவை தேர்தலுக்குப் பின்னர் மக்கள் பாஜகவுக்கு அனைத்து கதவுகளையும் அடைத்து பதிலடி கொடுப்பார்கள்.
எல்லோர் மீதும் ஊழல் குற்றசாட்டை சொல்லிவருகிறது பாஜக. ஆனால், இந்தியாவிலேயே அமித் ஷாவைப் போல் ஊழல்வாதி இல்லை. பாஜகவைப் போல் ஊழல் கட்சியும் இல்லை. பாஜக ஆட்சியில்தான் நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸ்கி என்று வங்கிகளைக் கொள்ளையடித்து தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடினர். ரஃபேல் ஊழலுக்கும் பாஜகதான் காரணம்.
ஆட்சியில் இருக்கும் பாஜக எல்லா பிரச்சினைக்கும் மற்றவர்களை குறைகூற கூடாது. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வதாக பாஜக சொல்கிறது. நாங்கள் மோடியை எதிர்க்கவில்லை. அவரது கொள்கைகளை எதிர்க்கிறோம்.
நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிட்டது. சுயாட்சி அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்றார்.
முன்னதாக ஹைதராபாத்தில் பேசிய அமித்ஷா, "2019 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிகை முடிந்தவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது எங்களுடன் வந்து இணைய மீண்டும் சந்திரபாபு முயற்சி செய்வார். ஆனால், உங்களிடம் ஒன்று உறுதியாக சொல்ல விரும்புகிறேன். இனி தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு எப்போதுமே சந்திரபாபுவுக்கு எப்போதுமே திறக்காது. அவர் ஆந்திர மக்களை தவறாக வழிநடத்தியிருக்கிறார். அவரை யுடர்ன் முதல்வர் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும்" எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT