Published : 28 Feb 2019 10:37 AM
Last Updated : 28 Feb 2019 10:37 AM

மரியாதையாகவே நடத்துகிறார்கள்: பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

எல்லையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளார்.

 

இதனிடையே சமூக வலைதளங்களில்  வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபிநந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண்  27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார். வீடியோ வைரலானதை அடுத்து, விமானி அபிநந்தனை இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று குரல்கள் எழுந்துவருகின்றன. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

 

நேற்று மாலை வெளியிடப்பட்ட வீடியோவில் அபிநந்தனுடன் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உரையாடுகிறார்.  அப்போது அபிநந்தன் தேநீர் குடித்துக் கொண்டே, “பாகிஸ்தான் ராணுவம் என்னை நன்றாகவே நடத்துகின்றது. நான் இந்தியாவுக்குச் சென்றாலும் என் கருத்தை மாற்ற மாட்டேன்.

 

பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடவடிக்கை விரும்பத்தக்க வகையில் உள்ளது. என்னைக் காப்பாற்றி நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவ கேப்டன் முதல் வீரர்கள் வரை என்னை அனைவரும் மரியாதையாகவே நடத்துகிறார்கள்” என்றார்.

 

மேலும், இந்தியாவில் நீங்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, இதற்கு பதில் அளிக்க வேண்டுமா என்ற அவர் தான் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்று கூறுகிறார்.

 

உங்கள் இலக்கு என்ன என்று கேட்ட போது பதிலளிக்க மறுத்து விட்டார்.  தேநீர் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் என அந்த அதிகாரி தெரிவித்த போது, தேநீர் மிகவும் நன்றாக உள்ளது நன்றி, என்றார் அபிநந்தன்.

 

எந்த விமானத்தை நீங்கள் ஓட்டினீர்கள் என்ற கேள்விக்கு, இது பற்றிச் சொல்லத் தேவையேயில்லை, ஏனென்றால் அந்த விமானம் நொறுங்கியதை நீங்களே பார்த்தீர்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x