Published : 11 Feb 2019 08:17 AM
Last Updated : 11 Feb 2019 08:17 AM
மக்களவைத் தேர்தல் வரை ராமர் கோயில் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்திருந்தன. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்குக்கும் (ஆர்எஸ்எஸ்) இடையேயான கருத்து வேறுபாடே காரணமாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் செப்டம்பரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாக்பூர் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் மோகன் பாக்வத் உரையாற்றினார். அதில், மத்திய அரசு சட்டம் இயற்றி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைதொடர்ந்து, அதன் கிளை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தும் (விஎச்பி) அதை வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை இந்துத்துவா கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சியான சிவசேனாவும் வலியுறுத்த தொடங்கியது.
எனினும், கடந்த வாரம் உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவின் சாதுக்கள் சபையில் பேசிய மோகன் பாக்வத், ராமர் கோயில் கட்ட மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். இதன் மீதான போராட்டத்தையும் தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என மறைமுகமாகவும் வலியுறுத்தி இருந்தார்.
இதனை புரிந்துகொண்ட விஎச்பி, ராமர் கோயில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அண்மையில் அறிவித்தது. இதன் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி மீது ஆர்எஸ்எஸுக்கு இருக்கும் அதிருப்தி காரணம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘கடந்த தேர்தலில் வீசிய மோடி அலை, எதிர்ப்பு அலையாக மாறி விட்டது. இது மக்களவையில் வெற்றியை பாதிக்காத வகையில் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் தேர்தலுக்கு பின் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இப்போதே அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சியினர் இடையேயும் வலுவான கூட்டணி அமையாததால் தொங்கு நாடாளுமன்றத்துக்கு வாய்ப்பு இருப்பதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்காமல் எதிரணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் வேறு வாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கும் நிலை உருவாகவும் வாய்ப்புள்ளது.
இதனிடையே, மோடியை மீண்டும் பிரதமராக அமர்த்த பாஜக கூட்டணியிலும் ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்ப தொடங்கி விட்டன.
இதனால், தேர்தலுக்கு பின் உருவாகும் சூழலில், நிதின் கட்கரியை பிரதமராக முன்னிறுத்தி பிராந்திய மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு ஆர்எஸ்எஸ் முயலுகிறது.
இதற்காக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுடனும் ஆர்எஸ்எஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
உ.பி.யின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டுமே இதில் இடம்பெறவில்லை. மற்றபடி, எதிரணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்திருக்கின்றன. மேலும், திமுகவுக்கு தமிழகத்தில் அதிக தொகுதிகள் கிடைத்தால், அதனிடமும் ஆதரவு பெற திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT