Published : 10 Apr 2014 12:00 AM
Last Updated : 10 Apr 2014 12:00 AM
மக்களவைக்கான மூன்றாவது கட்டத் தேர்தல் 11 மாநிலங்கள் மற்றும், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
சுமார் 11 கோடி வாக்காளர்கள், தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் உள்ளிட்ட சில தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புது டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக டெல்லி மாநில தலைவர் ஹர்ஷ்வர்தன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் பத்திரிகையாளர் அசுதோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத், வடமேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஹரியாணா மாநிலத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ரோத்தக்கில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடாவின் மகன் தீபேந்தர் சிங் ஹுடா போட்டியிடுகிறார். குர்கான் தொகுதியில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்தர் யாதவ் போட்டியிடுகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 9-ல் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. சத்னா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங் போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் விதர்பா பகுதியைச் சேர்ந்த 10-ல் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாக்பூர் தொகுதியில் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். பண்டாரா கோண்டியா தொகுதியில் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல் (தேசியவாத காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சோனி சோரி, பாஜக சார்பில் தற்போதைய எம்.பி. தினேஷ் காஷ்யப் போட்டியிடுகின்றனர்.
பிஹாரில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மக்களவைத் தலைவர் மீரா குமார், மத்திய இணை அமைச்சர் காந்தி சிங், லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் உள்ளிட்ட 80 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மத்திய அமைச்சர்கள் சசி தரூர், கொடிகுன்னில் சுரேஷ், கே.சி.வேணுகோபால், கே.வி.தாமஸ், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்ற னர்.
இது தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், ஒடிசாவில் 10 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்கிறது.
3 யூனியன் பிரதேசங்கள்
சண்டீகரில் மும்முனை போட்டி நிலவுகிறது. இங்கு, ஊழல் வழக்கில் சிக்கிய மத்திய ரயில்வே துறை முன்னாள் அமைச்சர் பவண் குமார் பன்சல் (காங்கிரஸ்), பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கிரண் கேர், ஆம் ஆத்மி சார்பில் நடிகை குல்பனாக் போட்டியிடுகின்றனர். அதேபோன்று லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT