Published : 07 Feb 2019 05:41 PM
Last Updated : 07 Feb 2019 05:41 PM

தாலிக்கு தங்கம், மாணவிகளுக்கு இ-பைக்: அசாம் பட்ஜெட்டில் சலுகைகள் ஏராளம்

2019- 2020 நிதியாண்டுக்கான அசாம் மாநில பட்ஜெட் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. பாஜக ஆளும் மாநிலமான அசாமில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மக்களுக்கான இலவசத் திட்டங்கள் ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் என்றெல்லாம் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவையெல்லாமே நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் வைத்து அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பாஜக ஆளும் மாநில பட்ஜெட்டும் சலுகைகளை அறிவித்து எம்.பி. தேர்தலை முன்வைத்து அறிவிக்கப்பட்ட பட்ஜெட் என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது.

பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மணப்பெண்ணுக்கு தங்கம் வழங்கும் அருந்ததி திட்டத்தை அறிவித்தார்.

அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மணப்பெண்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவராக அதாவது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மணப்பெண்ணாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் மணப்பெண்ணுக்கு 11.34 கிராம் எடையில் தங்கம் வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ.38,000. திருமணத்தை, அசாம் மாநில சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன் கீழ் பதிவு செய்பவர்களுக்கு திட்டத்தின் பலன் கிடைக்கும் என அமைச்சர் விளக்கிக் கூறினார்.

இந்த திட்டத்துக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மாணவிகளுக்கு இ-பைக்:

இதேபோல் மாணவிகளுக்கு இ-பைக் வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் அறிவித்தார். பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகும் அனைத்து மாணவிகளுக்கு இ-பைக் வழங்கப்படும் என்றார்.

அதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய அதாவது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு வரை சேர்க்கைக் கட்டணம் ரத்து, இலவச பாடப்புத்தகங்கள் போன்ற சலுகையை அறிவித்தார்.

இந்த திட்டத்துக்கு ஞான் தீபிகா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தேயிலைத் தொழிலாளர்களுக்கு சலுகை..

தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் அசாம் மொத்த மக்கள் தொகையில் 17% பேர் உள்ளனர். அவர்கள்தான் பாஜகவின் மிகப்பெரிய வாக்குவங்கி. அதனால் தேயிலைத் தொழிலாளர்களுக்கு கிலோ ரூ.3 என்ற விலையில் வழங்கி வரும் அரிசியை இனி முற்றிலும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால் 4 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x