Last Updated : 16 Feb, 2019 10:55 AM

 

Published : 16 Feb 2019 10:55 AM
Last Updated : 16 Feb 2019 10:55 AM

புல்வாமா தாக்குதல்: 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துடன் சென்ற தற்கொலைப்படை தீவிரவாதி; எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது?

ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் தற்கொலைப்படைத் தீவிரவாதியால் கொல்லப்பட்டதில், ஏறக்குறைய 150 கிலோ சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் எப்படி நடந்தது?

இந்தத் தாக்குதல் எவ்வாறு நடந்தது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறியதாவது:

ஸ்ரீநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையில் பொதுமக்கள் வாகனங்கள் செல்வதற்காக தனியாகப் பாதைகள் விடப்பட்டு இருந்தன.

இதனால், துணை ராணுவப் படைகள் செல்வதிலும், சாதாரண மக்கள் செல்வதிலும் இடையூறு இல்லாமல் இருந்தது. குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து வரும் சாலைகள் பிரதான நெடுஞ்சாலையில் இருந்து இணைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

அப்போது மாலை 3.30 மணி அளவில் காக்காபோரா, லேல்கர் இணைப்புச் சாலையில் இருந்து வேகமாக வந்த ஒரு எஸ்வியு கார், சிஆர்பிஎப் வீரர்கள் பேருந்து சென்ற வரிசையில் 5-வது பேருந்து மீது இடது புறம் மீது பலமாக மோதியது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அதில் அகமது தார் தன்னுடைய காரில் 150 கிலோ வரை சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை வைத்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடிபொருட்கள் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். வாகனம் வெடித்துச் சிதறியதில், 80 மீட்டர் தொலைவில் அகமது உடல் காணப்பட்டது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பல வீரர்கள் தங்களுடைய ஆண்டு விடுமுறையைக் குடும்பத்தாருடன் கழித்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பியவர்கள்.

விமானத்தில் செல்ல வாய்ப்பு இருந்ததா?

சிஆர்பிஎப் வீரர்களை விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற பேச்சு இப்போது எழுகிறது. ஆனால், அதற்கான சூழல், வசதி ஏதும் இல்லை. ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை அனைத்துமே சாலை மார்க்கமாகவே செல்ல வேண்டும்.

இது தொடர்பாக நாங்கள் உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதி இருந்தோம்.

அதில் சிஆர்பிஎப் முகாமில் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களை அடுத்தடுத்த முகாமுக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும்போது, விமானம் பயன்படுத்த முடியாது, பேருந்து மூலமாகவே வீரர்களை அழைத்துச் செல்ல முடியும். பேருந்துகளில் லேசான உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டு இருப்பதால், துப்பாக்கி குண்டுகள், வெடிபொருட்களில் இருந்து தப்பிக்க முடியாது. திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் பதிலடி கொடுப்பது கடினம்.

ஆதலால், அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய வாகனங்கள் தேவை என்றும், குறிப்பாக ஆர்டிஎக்ஸ் போன்ற சக்திவாய்ந்த வெடிபொருட்களை சமாளிக்கும் வகையில் வாகனங்கள் தேவை எனக் கேட்டிருந்தோம்.

மேலும், தீவிரவாதிகளில் எந்தநேரத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் எங்களுக்குக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், எந்த இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை குறிப்பிட்டுக் கூறவில்லை".

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x