Published : 06 Feb 2019 08:05 AM
Last Updated : 06 Feb 2019 08:05 AM

சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த பாஜக எம்பிக்கு நோட்டீஸ்: ஆந்திர சட்டப்பேரவை ஒழுங்கு நடவடிக்கை பிறப்பித்தது

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பிக்கு, நேற்று சட்டப்பேரவை ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள மாநில சட்டப் பேரவையில் தற்போது இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் விஷ்ணுகுமார் ராஜு கேட்ட கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளித்தார். இது குறித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினரான ஜிவிஎல் நரசிம்மா ராவ், தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக எம்எல்ஏ விஷ்ணுகுமார் ராஜுவுக்கு பதிலளித்தபோது சந்திரபாபு நாயுடு ஒரு அசெம்ப்ளி ரவுடி போல் நடந்து கொண்டார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பலர் இதனை கடுமையாக கண்டித்தனர். இந்நிலையில், நேற்று காலை அமராவதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தாட்டிகொண்டா சட்டப்பேரவை உறுப்பினரான ஸ்ராவண் குமார், சபாநாயகர் கோடல சிவப்பிரசாத்திடம் நோட்டீஸ் அளித்தார். அதில், சட்டப்பேரவை உறுப்பினரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை, பாஜ எம்பி ஜிவிஎல் நரசிம்மா ராவ், தனது சமூக வலைதளத்தில், மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். ஆதலால், அவர் மீது சட்டப் பேரவை ஒழுங்கு நடவடிக்கை குழு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இதனை ஏற்ற குழு, நரசிம்மா ராவின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்து, இது குறித்து ஆந்திர சட்டப்பேரவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தக்க விளக்கம் அளிக்க வேண்டுமென நேற்று நோட்டீஸ் பிறப்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x