Published : 02 Feb 2019 09:15 PM
Last Updated : 02 Feb 2019 09:15 PM
மாநிலங்களவை உறுப்பினர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் சுரேஷ் கோபியை தம் மாநிலத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என வலியுறுத்தி கேரளா பாஜகவினர் தம் தேசியத் தலைவர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு கடந்த செப்டம்பர் 28-ல் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை எதிர்ப்பதில் கேரளாவின் பாஜகவினர் தம் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்குடன் இணைந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு கிடைத்துள்ள வரவேற்பால் இந்தமுறை மக்களவை தேர்தலில் பாஜக கேரளாவில் தன் புதுக்கணக்கை துவக்கும் என நம்புகிறது. வரும் மக்களவை தேர்தலில் கேரளாவின் 20 தொகுதிகளில் போட்டியிட வைக்க அமித்ஷாவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், கேரளா மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, மாநிலப் பொதுச்செயலாளரான கே.சுரேந்திரன் மற்றும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கேரளாவின் எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, ‘பலத்த ஆதரவுடன் போட்டிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். இதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா எனத் தெரியாது. நம் தலைமை இறுதி முடிவு எடுத்து அவர்கள் சம்மதத்துடன் அறிவிக்கும்.’ எனத் தெரிவித்தனர்.
தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது கர்நாடகா மாநிலம் சார்பில் மாநிலங்களவையின் பாஜக உறுப்பினராக உள்ளார்.
இதற்கு முன் அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட ஓக்கி புயல் சேதத்தில் கேரளாவை பார்வையிட நிர்மலா வந்திருந்தார்.
மீனவர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுடன் அவர் கனிவாகப் பேசியது அனைவரையும் கவர்ந்தது. எனவே நிர்மலாவை ஒரு தென்னிந்தியர் என்ற முறையில் தம் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வைத்தால் வெற்றி கிடைக்கும் என கேரளா பாஜக நம்புகிறது.
இதேபோல், மலையாளப் பட உலகின் பிரபல நடிகரான சுரேஷ் கோபி பாஜகவில் இணைந்த பின் அவர் கேரளா சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். இதனால், பிரபல அடைந்து வரும் கோபி, மக்களவை தேர்தலில் வெல்வார் என்பதும் கணிப்பாக உள்ளது.
பாஜகவில் நடிகர் மோஹன்லால்?
இந்த பட்டியலில் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோஹன்லால் பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவருக்கு தற்போது குடியரசு தலைவரால் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
எனினும், அதற்கு முன்பில் இருந்து பாஜகவிற்கு சாதகமாகவே மோஹன்லால் பேசி வருகிறார். இதனால், அவர் பாஜகவில் சேருவார் என்பது அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT