Published : 25 Jan 2019 09:50 AM
Last Updated : 25 Jan 2019 09:50 AM

தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு: ஆந்திராவில் 4 முனை போட்டிக்கு வாய்ப்பு: பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சி எது?

வரும் தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதால் அங்கு 4 முனை போட்டி ஏற்படும் எனத் தெரிகிறது. அதேநேரம் பாஜக எந்தக் கட்சியுடன் இணையும் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, தனது பரம எதிரியான காங்கிரஸுடன் இணைந்து தெலுங்கு தேசம் போட்டியிட்டது. ஆனால், அங்கு டிஆர் எஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஆந்திராவிலும் காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வரும் மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில பொறுப்பாளார் உம்மன் சாண்டியும் மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டியும் அறிவித்துள்ளனர். இதனால், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, காங்கிரஸ் என 4 முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அதேநேரம் பாஜகவின் நிலை என்ன என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. தெலுங்கு தேசத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜக, மீண்டும் அக்கட்சியுடன் இணைய வாய்ப்பில்லை. இதுபோல, பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் திட்டவட்டமாக கூறி விட்டார். இவரது கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிட தயாராகி வருகின்றன. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்குமா? இல்லையா ? என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க, காங்கிரஸ் உட்பட 22 கட்சிகளை ஒரு அணியாக திரட்டி, மெகா கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு முயற்சி செய்தார். ஆனால், தனது சொந்த மாநிலத்திலேயே காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல், தனித்து போட்டியிட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேசமும், காங்கிரஸும் எதிரிகள் போல செயல்பட்டு வரும் நிலையில், தேசிய அளவில் கூட்டணி எப்படி சாத்தியம்? என பாஜக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனசேனா ஆகிய கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர். சொந்த மாநிலத்தில் இல்லாத கூட்டணி, மற்ற மாநிலங்களில் எதற்கு? இது வெறும் அரசியல் நாடகம் என அவர்கள் கேலி செய்ய தொடங்கி உள்ளனர்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சிந்தா மோகன் திருப்பதியில் நேற்று செய்தியாளர் களிடம் பேசும்போது, “வரும் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட வேண்டும்” என ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்க காரணமான காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைத்தால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம் என சந்திரபாபு நாயுடு கருதுகிறார். எனவே, தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கலாம் என தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x