Published : 31 Jan 2019 03:46 PM
Last Updated : 31 Jan 2019 03:46 PM
ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணா மிதா அபார வெற்றி பெற்றுள்ளார்.
அதேசமயம். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், செய்தித்தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டு தோல்வி அடைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஹரியானாவின் ஜிந்த், ராஜஸ்தானின் ராம்கார் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. ஜிந்த் தொகுதி எம்எல்ஏ ஹரி சான் மிதா திடீரென காலமாகிவிட்டதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாபியா ஜுபைர் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலம், ஜிந்த் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் பாஜக சார்பில் கிருஷ்ணா மிதா, ஜனநாயக ஜனதா கட்சி(ஜேஜேபி) சார்பில் திக்விஜய் சிங்கின் சவுதாலா, காங்கிரஸ் கட்சி சார்பில் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் போட்டியிட்டனர். ஒட்டுமொத்தமாக 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளர் கிருஷ்ணா மிதா 50566 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஏறக்குறைய ஜேஜேபி வேட்பாளரைக் காட்டிலும் 12 ஆயிரத்து 935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜேஜபி வேட்பாளர் திக்விஜய் சிங் சவுதாலா 37 ஆயிரத்து 631 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா 22 ஆயிரத்து 740 வாக்குகளும் பெற்றனர்.
இந்த வெற்றியையடுத்து பாஜக தொண்டர்கள், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெற்றி பெற்ற பாஜகவேட்பாளர் கிருஷ்ணா மிதா கூறுகையில், " என்னை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல பாஜகவின் வெற்றி. என்னை எதிர்த்து பல பெரிய தலைவர்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளனர். பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வோம் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT