Published : 16 Jan 2019 08:32 PM
Last Updated : 16 Jan 2019 08:32 PM
டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், டெல்லிவாழ் தமிழர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இதில், நேற்று முன்தினம் திங்கள்கிழமை போகியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கல் தினமான ஜனவரி 15 ஆம் தேதி அன்று வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் திறந்தவெளியில் பாரம்பரிய முறையில் 25 மண்பாண்டங்களில் பொங்கல் வைக்கும் ’பெரும் பொங்கல்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகளை தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர்கள் நா.முருகானந்தம் மற்றும் ஹிதேஸ் குமார் எஸ்.மக்வானா ஆகியோர், குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.
தமிழ்நாடு அரசின் அரசின் கலைப்பண்பாட்டுத்துறை மூலமாக ஏற்பாடு செய்த பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம், கரகம், காவடி, உள்ளிட்ட நாட்டுப்புற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழ்நாடு இல்லப்பணியாளர்களின் குழந்தைகள் வழங்கிய பரதநாட்டியம், வாய்ப்பட்டு, நாவலர் நந்தலாலா குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது. டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளி மாணவர்கள், டெல்லி பல்கலைகழக மாணவர்கள், எய்ம்ஸ் தமிழக அலுவலர்கள், பவானி பிரசனாலயா ஆகியோர் நாட்டிய இன்னிசை நிகழ்ச்சியும், பல்சுவை நிகழ்ச்சிகளும் வழங்கியிருந்தனர்.
போகி பண்டிகையினை முன்னிட்டு கோலப்போட்டியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மகளிர் பல வண்ணங்களில் அழகான கோலமிட்டிருந்தனர். இவற்றில்
சிறந்த கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பொங்கல் விழாவில் டெல்லியில் பணியாற்றும் தமிழகத்தின் குடிமைப்பணி அதிகாரிகளான தனவேல், தூர்தர்சன் இயக்குனர் சுப்ரியா ஸாஹு .உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்சிகளை தமிழாசிரியர் ராஜராஜேஸ்வரி தொகுத்து வழங்க, தமிழ்நாடு இல்ல துணை உள்ளுறை ஆணையாளர் என்.ஈ.சின்னத்துரை நன்றி கூறினார்.
இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர்கள் நா.முருகானந்தம் மற்றும் ஹிதேஸ் குமார் எஸ்.மக்வானா ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT