Last Updated : 19 Jan, 2019 07:55 PM

 

Published : 19 Jan 2019 07:55 PM
Last Updated : 19 Jan 2019 07:55 PM

உ.பி.யில் கோசாலைகளின் நிதிக்காக மதுபானங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளது யோகி அரசு

உபியில் கோசாலைகளின் நிதிக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு கூடுதலான சிறப்புக் கட்டணம் வசூல்செய்யப்பட உள்ளது. இதன் மீதான முடிவை நேற்று முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கூடி முடிவு எடுத்துள்ளது.

 

இது குறித்து உபி மாநில செய்திதொடர்பாளரும் மின்துறை அமைச்சருமான ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, ‘இதன்மூலம், வருடம் ஒன்றுக்கு ரூ.165 கோடி அரசிற்கு வசூலாகும். இந்த தொகை உபி மாநிலத்தின் பசுக்களுக்கான பாதுகாப்பு கோசாலைகளில் பயன்படுத்தப்படும்.’ எனத் தெரிவித்தார்.

 

இதன் மீது அமைச்சர் சர்மா மேலும் கூறுகையில், ’ஒரு மதுபுட்டிக்கு 50 பைசா முதல் ரூ.2 வரையில் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். இதே புட்டிகளை உபி அரசின் அனுமதிபெற்ற மதுபான விடுதிகளில் அருந்துவோரிடம் மேலும் அதிகமாக ரூ.10 வசூல் செய்யப்படும்’ எனக் குறிப்பிட்டார்.

 

இதற்கு முன் உபியில் அகிலேஷ்சிங் யாதவ் தலைமையில் ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசிற்கும் நிதிச்சுமை ஏற்பட்டிருந்தது. இதற்காக, அவர் இதேவகை மதுபானங்களுக்கு இரண்டு சதவிகிதம் கூடுதல் வரி விதித்திருந்தார்.

 

பசுக்கள் மீது அதிக கவனம்

 

வட இந்தியாவில் இந்துக்கள் பசுக்களை புனிதமாகக் கருதுகின்றனர். இதனால், பசுக்களின் பாதுகாப்பு மீது பாஜக அரசு இந்தமுறை ஆட்சியில் அமர்ந்தது முதல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

 

அடைக்கப்படும் பசுமாடுகள்

 

கடந்த சில மாதங்களாக அனாதைகளாக சாலை மற்றும் தெருக்களில் திரியும் பசுமாடுகள் வழியிலுள்ள வயல்வெளிகளில் பயிர்களை மேய்வது அதிகமாகி வருகிறது.

 

இதனால், பாதிக்கப்படும் விவசாயிகள் பசுமாடுகளை அரசு கட்டிடங்களில் அடைத்து விடுவதும் வாடிக்கையாகி விட்டது.

 

உ.பி.வாசிகள் வரவேற்பு

 

இதனால், உணவளிக்கப்படாமல் பட்டினியால் வாடும் பசுமாடுகள் பலியாவது அதிகமாகி வருகிறது. இதற்கு அரசு மற்றும் பொதுநல அமைப்புகள் நடத்தும் கோசாலைகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க யோகி அரசு எடுத்துள்ள முடிவு உபிவாசிகளால் வரவேற்கப்பட்டுள்ளது.

 

மதுப்பிரியர்கள் எதிர்ப்பு

 

எனினும், மதுப்பிரியர்களால் யோகி அரசின் புதிய உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதை அவர்கள் வெளியிலும் காட்ட முடியாமல் தம் பகுதியில் பாஜகவினரிடம் புலம்பி வருவதும் தெரியவந்துள்ளது.

 

ரயில் விபத்தில் 25 பசுக்கள் பலி

 

இதனிடையே, நேற்று உபியின் புந்தேல்கண்ட் பகுதியின் மாவட்டங்களில் ஒன்றான ஹமீர்பூரின் ரயிலில் சிக்கி 25 பசுமாடுகள் பலியாகி உள்ளன. இந்த பசுமாடுகள் வயல்வெளிகளை மேய்வதால் ராகோல் ரயில்நிலையப் பாதல்யில் விரட்டி விடப்பட்டதால் இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x