Published : 24 Jan 2019 01:20 PM
Last Updated : 24 Jan 2019 01:20 PM

நீதிபதி ஏ.கே.சிக்ரியும் விலகல்: சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுப்பு

சிபிஐ இடைக்கால இயக்குநரான நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்ய வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஏ.கே. சிக்ரி இன்று திடீரென அறிவித்தார்.

சிபிஐ புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21-ம் தேதி தெரிவித்து திடீரென விலகிய நிலையில், இப்போது மூத்த நீதிபதி சிக்ரியும் விலகியுள்ளார்.

பனிப்போர்

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவியதால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

உத்தரவு

இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது.

அதையடுத்து அலோக் வர்மாவைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் பொறுப்பேற்றார்.

பொதுநலன் மனு

இந்நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி முழுப்பொறுப்புடன் புதிய இயக்குநரைத்தான் நியமிக்க முடியும், சிபிஐக்கு இடைக்கால இயக்குநர் என ஒருவரை நியமிக்க முடியாது. நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவும், நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தார்

தலைமை நீதிபதி விலகல்

இந்த மனுவை கடந்த 21 ஆம் தேதி நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்கும் குழுவில் இருந்து தான் விலகுவதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யும், பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழுவில் தானும் இடம் பெற்று இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க இயலாது. இந்த மனு வரும் 24-ம் தேதி மூத்த நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சிக்ரி விலகல்

இந்நிலையில், இந்த மனு மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தான் விசாரிப்பதில் இருந்து விலகுகிறேன் என்று நீதிபதி சிக்ரி அறிவித்தார்.

அப்போது, அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நீதிபதியிடம் கூறுகையில், “ பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று புதிய சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்ய கூடுகிறது. அப்படி இருக்கும்போது நாளை விசாரிக்கப்பட்டால் முறையாகாது. ஆதலால், இன்று விசாரிக்கவேண்டும். அது எங்கள் விருப்பம், நீங்கள் இதற்கு முன் அலோக் வர்மாவை நீக்கிய குழுவில் இருந்துவிட்டு இப்போது இந்த மனுவை விசாரிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை “ எனத் தெரிவித்தார்.

அப்போது அரசு சார்பில் ஆஜராகிய அட்டர்னி கே.கே.ஜெனரல் பேசுகையில், “ என்னுடைய விருப்பமும் இதுதான் “ எனத் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு நீதிபதி ஏ.கே. சிக்ரி பதில் அளிக்கையில், “ கடந்த 21-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என் தலைமையிலான குழு விசாரிக்கும் என்று நிர்வாக ரீதியாக மட்டுமே ஒதுக்கீடு செய்தார். ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருந்தால் வழக்கை விசாரிக்காமல் நான் செல்ல முடியாது. ஆதலால், நான் வழக்கில் இருந்து என்னை விடுவிக்கிறேன் “ எனத் தெரிவித்தார்.

காரணம் என்ன?

இதற்கிடையே சிபிஐ இயக்குர் அலோக் வர்மாவை நீக்கிய நரேந்திர மோடி தலைமையிலான உயர் மட்டக் குழுவில் நீதிபதி ஏ.கே. சிக்ரியும் இடம் பெற்றிருந்தார், மேலும், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்த குழுவிலும் சிக்ரி இருந்தார். ஆதலால்தான் தான் இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்று சிக்ரி விலகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அலோக் வர்மாவை நீக்கி, நாகேஸ்வரராவை நியமித்தபின். ஏ.கே.சிக்ரி காமென்வெலத் அமைப்பின் தலைவராக பரிந்துரைத்து மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விமர்சித்ததால், அவர் காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவராக பரிந்துரைக்க வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x